தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகை சமந்தா, தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் அதிகாரபூர்வமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும், இதற்காகத் திரையுலகில் இருந்து தற்காலிகமாக மகப்பேறு விடுப்பு எடுக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குத் திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய சமந்தா, “திரைத்துறையில் இருந்து இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்கப் போகிறேன்.
“ஆனால், அதன்பிறகு நிச்சயம் நான் மீண்டும் நல்ல நிலையில் திரும்பி வருவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
“என் வாழ்க்கையின் இந்தத் தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவுக்கும் பாலிவுட், இணையத் தொடர்களின் இயக்குநரான ராஜ் நிதிமொருவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பிறகும் திரையரங்குகளின் வசூலில் சாதனை படைத்த சமந்தா, இப்போது தனது தனிப்பட்ட வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதை அடுத்து, திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்குச் சமூக ஊடகங்களில் தங்களது வாழ்த்துகளை மலையெனக் குவித்து வருகின்றனர்.

