இயக்குநர் மிஷ்கின் ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘துப்பறிவாளன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.
‘சவரக்கத்தி’, ‘நந்தலாலா’, ‘மாவீரன்’, ‘லியோ’ போன்ற சில படங்களில் மிஷ்கின் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
பாலா திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘பாலா 25’ விழா கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், “நான் கீழே விழுந்தபோது ‘பிசாசு’ படம் மூலம் கைகொடுத்தவர் பாலா,” என தெரிவித்துள்ளார்.
“நான் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்தார்.
“அவர் தயாரிப்பில் ஒரு படம் இயக்கச் சொன்னார். அப்படி உருவான படம்தான் ‘பிசாசு’. நான் கீழே விழுந்திருந்த நேரத்தில் என் கையைப் பிடித்து ஒரு படத்தைக் கொடுத்தார் பாலா. என் வாழ்க்கை முழுவதும் பாலாவிற்கு கடமைப்பட்டிருக்கிறேன்,” என்றார் மிஷ்கின்.
“100 ஆண்டுக்குள் பெரும்பாலானவர்கள் மறைந்து விடுவார்கள். ஆனால் இளையராஜா, பாலா போன்றவர்கள் இறக்கமாட்டார்கள், வாழ்நாள் முழுவதும் அவர்களது படைப்புமூலம் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.” என்று நெகிழ்வாக பேசினார் மிஷ்கின்.
வெற்றி, தோல்வியைக் கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் இருப்பதால் அவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

