சமூகத்துக்கு நல்ல செய்தியை சொல்லக்கூடிய படத்தில் தாம் பங்களித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகச் சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள `டிராகன்’ திரைப்படம் கடந்த 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோத்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார்.
அனுபமா, காயட் லோகர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ‘டிராகன்’ பட வெளியீட்டிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரதீப் ரங்கநாதன்,
அப்போது, “உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டார்.
“தொடக்கத்திலேயே இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்ததற்கு நன்றி. இது அழகான படம். ஜாலியாக, நன்கு அனுபவித்து பார்க்கலாம். இந்த அழகான படத்தைக் கொடுத்த எனது நண்பர் அஷ்வத்திற்கு நன்றி.
“ஒரு நல்ல தகவலைச் சொல்லக்கூடிய படத்தில் நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்தையும் கடந்து எல்லாருக்கும் இந்தப் படம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் பிரதீப்.
தொடர்புடைய செய்திகள்
`டிராகன்’ படத்துடன் தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் கடந்த 22ஆம் தேதியன்று வெளியானது.
இரு படங்களிலும் நகைச்சுவை, காதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழில் ஒரே நாளில் வெளியான இரண்டு படங்கள் இவ்வாறு விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பிரதீப் நடித்த ‘லவ் டுடே’ படத்தின் மொத்த வசூல் நூறு கோடி ரூபாயைக் கடந்தது. தமிழ் சினிமாவில் வேறு எந்த கதாநாயகனுக்கும் நடிகராக அறிமுகமான படத்தில் இந்த அளவுக்கு வசூல் அமைந்ததில்லை.
இந்நிலையில், டிராகன் படத்தின் வசூல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று விநியோகிப்பாளர் தரப்பு எதிர்பார்க்கிறது.