தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் அனுஷ்காவின் தீவிர ரசிகன்: விக்ரம் பிரபு

3 mins read
29b2874d-c8f8-4c4f-a486-dd7cc696139a
விக்ரம் பிரபு. - படம்: ஊடகம்
multi-img1 of 3

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ளது ‘காட்டி’ திரைப்படம். இதில் அவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு.

இப்படத்தின் இயக்குநர் கிரிஷ்ஷும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் நல்ல நண்பர்களாம். விஜய் சொல்லித்தான் விக்ரம் பிரபுவை நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் கிரிஷ்.

படத்தின் கதையை இயக்குநர் கிரிஷ் விவரித்தபோதே, தனக்கும் அவருக்குமான அலைவரிசை மிகவும் சிறப்பாக இருப்பதாக உணர முடிந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் விக்ரம் பிரபு.

வித்தியாசமான கதையின் அமைப்பும் தனது அபிமான நாயகிகளில் ஒருவரான அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கவிருக்கும் உற்சாகமும்தான் ‘காட்டி’யில் நடிக்கத் தமக்குத் தூண்டுகோலாக அமைந்ததாக விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

இது மலை சார்ந்த காடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய படம். அவர்களுடைய சிரமங்களையும் அதே சமயம், அவர்களுடைய நம்பிக்கையான வாழ்க்கையையும் பதிவு செய்யும் படைப்பு என்றும் குறிப்பிடலாம்.

முக்கியக் காட்சிகளை ஒடிசாவில் உள்ள காடுகளில் படமாக்கி உள்ளனர். அந்தக் காடுகள், அவற்றின் பரப்பு, இயற்கைச்சூழல் என அனைத்துமே வியப்பை ஏற்படுத்தியதாக விக்ரம் பிரபு மட்டுமல்ல, மொத்த படக்குழுவினரும் கூறுகின்றனர்.

“சென்னையை விட்டு வெளியே சென்றதன் மூலம் எவ்வளவு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன எனப் புரிந்தது. காடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

“இங்கே வாழ்க்கையின் சில நல்ல தருணங்களை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அன்றாடத் தேவைக்கு மட்டும், ஒவ்வொரு நாளும் உழைத்துப் பொருளையும் உணவையும் தேடிக்கொள்கிறார்கள்.

“கடினமான, கனமான பொருளையும்கூட எளிதில் தூக்கிச் சுமந்துகொண்டு மலை ஏறுகிறார்கள்,” என்று இன்னமும்கூட வியப்பு குறையாமல் பேசுகிறார் விக்ரம் பிரபு.

படப்பிடிப்பின்போது அனுஷ்கா மிக இயல்பாக இருந்ததாகவும் பெரிய நடிகை என்கிற தலைக்கனம் எல்லாம் அவரிடம் அறவே இல்லை என்றும் பாராட்டுகிறார்.

“அனுஷ்காவின் இந்த எளிமைதான் அவரது ஆகப்பெரிய பண்பு எனக் கருதுகிறேன். ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டப் படைப்புகளில் நடித்த ஒருவர், அந்தச் சாதனையைப் புரிந்த சுவடுகூட அறவே தெரியாத வகையில் நடந்துகொள்வது சாதாரணமல்ல.

“ஏற்கெனவே நான் அனுஷ்காவின் ரசிகன். ‘காட்டி’ படத்தில் நடித்த பிறகு தீவிர ரசிகனாகிவிட்டேன்,” என்கிறார் விக்ரம் பிரபு.

‘டாணாக்காரன்’ படத்துக்குப் பிறகு தாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரிவர அமையவில்லை என்று கூறுபவர், கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு ரசிகர்கள் அறவே மாறிவிட்டதாகச் சொல்கிறார்.

மேலும், ஓடிடி தளங்களின் வருகைக்குப் பின்னர் ரசிகர்களின் ரசனை மற்றொரு கட்டத்துக்குப் போய்விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“அண்மையில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்கள் வெற்றி பெறும்போது சினிமா வேறு திசைக்குத் திரும்பிவிட்டதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

“படங்களைத் தேர்வு செய்வது தொடர்பாக அப்பா பிரபுவிடம் ஏதும் கேட்பதில்லை. அனைத்து முடிவுகளையும் நான்தான் எடுக்கிறேன். ‘கும்கி’ படத்தில்கூட எனக்குப் பிடித்துத்தான் நடித்தேன்.

“அப்பாவும், ‘உனக்குப் பிடித்ததைச் செய்’ என்றுதான் சொல்லியிருக்கிறார். அவ்வளவு சுதந்திரம் கிடைத்திருப்பதால், அதற்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்றே எப்போதும் யோசிக்கிறேன். இது, மேலும் மேலும் நல்ல படங்களைத் தர வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தருகிறது,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் விக்ரம் பிரபு.

குறிப்புச் சொற்கள்