தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் அதிர்ஷ்டசாலி: மேகா ஆகாஷ்

3 mins read
2784a773-4870-4750-aa10-1407bf21566c
மேகா ஆகாஷ். - படம்: ஊடகம்

நடிகை மேகா ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளாகப் பொத்திப் பொத்தி பாதுகாத்த அவரது காதல் குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது. அவரது வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்க இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகனும் உதவி இயக்குநருமான சாய் விஷ்ணுவைத்தான் மேகா ஆகாஷ் இதுநாள் வரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தனக்கு கணவராக வரக்கூடியவர் பெண்களை மதித்து நடக்க வேண்டும், அனைவரிடமும் அன்பாக, உற்சாகமாகப் பேசிப்பழக வேண்டும் என்பதுதான் வருங்கால கணவர் குறித்த மேகாவின் எதிர்பார்ப்பாம். இந்த அம்சங்கள் விஷ்ணுவிடம் கச்சிதிமாக உள்ளதால் காதல் கைகூடியதாம்.

விஷ்ணு அனைவரையும் மதித்துப்பேசக் கூடியவர் என்றும் அவரிடம் தமக்கு மிகவும் பிடித்த குணம் இதுதான் என்றும் சொல்கிறார் மேகா.

கல்லூரியில் படித்தபோது தனக்கு நெருக்கமான தோழியான பிரியா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த மேகா, தனது தோழியின் அண்ணனான சாய் விஷ்ணுவை அங்குதான் சந்தித்துள்ளார்.

அச்சமயம் நியூயார்க் திரைப்பட நகரத்தில் படித்துக் கொண்டிருந்தாராம் சாய் விஷ்ணு.

தொடக்கத்தில் அதிகம் சந்தித்துப் பேசியதில்லை என்றாலும், ஒருமுறை தோழி பிரியா தன் அண்ணனை அறிமுகப்படுத்தியபோது சாய் விஷ்ணு ‘ஹாய்’ என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு மேகாவை கடந்து போனாராம்.

அந்த இயல்பான குணமும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக இப்போது கண்சிமிட்டி சிரித்தபடியே பகிர்கிறார் மேகா. இருவரும் அண்மையில் ரஜினியே நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

‘பேட்ட’ படம் வெளியாகும் முன்பே இருவர் மனதிலும் காதல் உணர்வு தன் விதையை போட்டுவிட்டதாம். இருவருமே ஒரே சமயத்தில்தான் காதலை வெளிப்படுத்தி உள்ளனர்.

“இருவரது மனதிலும் ஆழமான, அழகான நட்பு இருந்தது. அதுதான் காதலை சரியாக வெளிப்படுத்த துணை நின்றது. ஆறு ஆண்டு காதல் இப்போது திருமணத்தில் முடிய உள்ளது.

“எனக்கு இயற்கை, கடல், நெடுந்தூரப் பயணம் ஆகியவை மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவு வகைகளை ருசிப்பேன்.

“அவருக்கும் இது எல்லாம் பிடிக்கும். விஷ்ணு நிறைய படிப்பார், எழுதுவார். உலக சினிமாக்கள் பார்ப்பார். அது பற்றி என்னுடன் கலந்து ஆலோசிப்பார். இதையெல்லாம் அவர் மீதான காதல் அதிகமாக தூண்டுகோலாக இருந்தது.

“இருவருமே திரைத்துறையில் இருப்பதால் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. எல்லா சூழல்களிலும் எனக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளார். விஷ்ணு என் கணவராக அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி,” என்கிறார் மேகா.

இருவரது பெற்றோருக்கும் இளஞ்சோடிகளின் காதல் குறித்து ஏற்கெனவே நன்கு தெரியும். பெற்றோரின் ஆசியுடன்தான் காதலித்து வந்ததாக சொல்கின்றனர்.

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பாராம் மேகா. விஷ்ணுவைப் பொறுத்தவரை ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.

மேலும் ‘பரியேறும் பெருமாள்’ பட வாய்ப்பு முதலில் விஷ்ணுவுக்கும் மேகாவுக்கும் கிடைத்ததாம்.

பறியன் கதாபாத்திரத்தில் விஷ்ணு நடித்திருந்த சூழலில் சில காரணங்களால் அவரால் நடிக்க இயலாமல் போய்விட்டதாம்.

“திருமணத்துக்கு முன்பு நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்தேன். திருமணத்துக்குப் பிறகும் அதே போல் நடிப்பேன். என் கணவரும் அவரது குடும்பத்தாரும் எனக்கு இதற்கான அனுமதியை வழங்கி உள்ளனர்,” என்கிறார் மேகா.

குறிப்புச் சொற்கள்