இசை அமைப்பதாக இருந்தாலும் திரைப்படத் தயாரிப்பாக இருந்தாலும் தானே தமது படைப்பின் முதல் ரசிகர் என்று கூறியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
எவருமே இதுவரை செய்திராத புத்தாக்கத்தைத் தழுவி இறங்கும் எந்த முயற்சிக்கும் தமக்கு ரசிகர்கள் இருப்பார்களா என்ற கவலை இருந்ததே இல்லை என்று அவர் தெரிவித்தார். அப்போதுதான் புதியனவற்றை செய்ய முடியும் என்பது அவரது தாரக மந்திரம்.
“நானே எனது முதல் ரசிகன். இசையமைக்கும்போதும் அவ்வாறுதான்,” என்றார் அவர்.
மெய்நிகர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு புதுவகைத் திரைப்படத்தை இயக்கி, தயாரித்துள்ள திரு ஏ. ஆர். ரஹ்மான், தமிழ் முரசு நாளிதழுடனான சிறப்பு நேர்காணலில் அத்திரைப்படம் குறித்தும் தமது பயணம் குறித்தும் பகிர்ந்தார்.
ஏறக்குறைய அரை மணி நேரம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடந்த நேர்காணலில் எதார்த்தமாகவும் புன்னகையுடனும் பேசினார்.
“13 வயது முதல் நான் திரைப்படம் பார்த்துவருகிறேன். ஏன் சதுரங்கத் திரையில் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற கேள்வியை நானே என்னுள் எழுப்பியதுண்டு,” என்று கூறிய திரு ரஹ்மான், அதுவே இப்புத்தாக்கத்தின் ஆணிவேராக விளங்கியதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள தமது இல்லத்தில் தமது நண்பர்கள், முன்னாள் துணைவியாருடன் 2015ஆம் ஆண்டு நடந்த கலந்துரையாடல் இத்திரைப்படத்தின் கருவுக்கு வழிவகுத்தது என்றார். தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்த தமது நண்பர்கள் ரஹ்மானின் கனவுகளை நனவாக்கும் சாத்தியங்களை அறிந்து நம்பிக்கை அளித்தனர்.
பாரிஸ் நகரில் பாடல் பதிவுசெய்யப்பட்டது. ரோம் நகரில் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்தது. போஸ்னியா, ஆர்மெனியாவிலும் படப்பிடிப்பு நடந்தது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இத்திரைப்படத்தின் கதாநாயகி.
தொடர்புடைய செய்திகள்
தாமே பெரும்பாலான செலவுகளை ஏற்று தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் வருமானத்தையோ பொருளாதார ரீதியாகவோ தாம் சிந்திக்கவில்லை என்றும் பார்வையாளர்களுக்கு இதுவரை கிடைக்காத ஒப்பற்ற அனுபவத்தை வழங்குவதே முழுமுதல் நோக்கம் என்றும் விளக்கினார்.
“எதிர்பார்த்ததைவிட 40, 50 மடங்கு செலவு அதிகமாகிவிட்டது,” என்று பகிர்ந்தார் திரு ரஹ்மான்.
“இருந்தாலும் அதற்கான பணம் தானாக வந்தது. ஒரு அரேபிய திட்டப்பணி வந்தது. தானாகவே கதவுகள் திறந்தன. முதல் முன்னோட்டக் காட்சியைத் தயாரித்து லாஸ் ஏஞ்சலஸிற்குச் சென்றுவிட்டோம். அங்கு அதற்கான வரவேற்பு மிகுதியாக இருந்தது. பின்னர் கான் திரைப்படத் திருவிழாவின் விரிவுநிகர் அங்கத்தில் காட்சிப்படுத்தினோம். அங்கும் வரவேற்பு மிகுதியாக இருந்தது. இந்தியர்கள் அல்லாத அனைத்துலக ரசிகர்கள் இந்த இடங்களில் பெரும் வரவேற்பை அளித்தனர்,” என்று திரு ரஹ்மான் கூறினார்.
2024ஆம் ஆண்டு ஹாலிவுட் இன்ஃபினிட்டி திருவிழாவில் மொனொலித் விருதுகள் இந்தத் திரைப்படத்திற்குக் கிடைத்தன. தலைசிறந்த சினிமேட்டிக் இம்மர்ஸிவ் அனுபவத்துக்காக இத்திரைப்படம் அந்த விருதைப் பெற்றது.
திரைப்படத் தயாரிப்புக்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆனதால் பல நன்மைகளும் விளைந்தன. தொழில்நுட்பம் கண்ட வளர்ச்சியை அரவணைத்தே படமாக்கப்பட்டுள்ளது ‘லெ மஸ்க்’. அனைத்து அம்சங்களும் மெருகூட்ட செயற்கை நுண்ணறிவு கைகொடுத்தது.
இத்திரைப்படம் என்பது சுழலும் இருக்கையில் அமர்ந்து, மெய்நிகர் தொழில்நுட்பத்தால் ஆன கருவியைத் தலையில் பொருத்தி பார்க்கும்படியாக இருக்கும். ஒரு காட்சியைப் பல கேமராக்களைக் கொண்டு, அவற்றை நகர்த்தாமலே ஒரே இடத்திலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் கோர்க்கப்பட்டுப் படமாக்கப்பட்டுள்ளது.
இதன் தனித்துவம் வாசனைத் திரவியங்கள். மொத்தம் 12 வகை வாசனைகளை இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது உணர முடியும். கதையே வாசனைகளை மையமாக வைத்து நகர்கிறது.
இத்திரைப்படத்திற்கான இருக்கைகளின் விலை கணிசமானது என்று பகிர்ந்தார் திரு ரஹ்மான். கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாயாக இருந்ததால் விலையைக் குறைக்க வழிகள் தேடியதாகக் கூறிய அவர், பின்னர் கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இசையமைப்பாளராகத் தன் பயணம் தொடர்ந்தாலும் திரைத் தயாரிப்பில் கவனம் செலுத்தியது எப்படி முடிந்தது என்று கேட்டபோது, “என் வீட்டிற்குப் பக்கத்திலேயே மூன்று மாடிக் கட்டடத்தைக் கட்டினோம். முதல் தளத்தில் கேமராக்களைக் கொண்ட வரவேற்புக் கூடம். இரண்டாம் தளத்தில் 15 கணினிகளைக் கொண்ட பணியிடம். மூன்றாம் தளத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்துக்கான கருவிகளையும் சமிக்ஞைகளையும் பொருத்தி ஒளிப்பதிவுக்கு முந்தைய பணிகளை முன்னோட்டமிடும் கூடம்.”
“மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எனக்கு ஒரு அழைப்பு வரும். அங்குச் சென்று என்னென்ன பணிகள் நடந்துள்ளன என்பதைப் பார்வையிடுவேன். பிடிக்கவில்லை என்றால் மீண்டும் அதைச் செய்யவேண்டிய சூழல். அதனால் காலதாமதமும் ஆகும். இப்படியே படிப்படியாகத் தைக்கப்பட்ட படம்தான் லெ மஸ்க்,” என்று விளக்கினார் திரு ரஹ்மான்.
“கதைக் கரு என்பது சாதாரணம்தான். ஆனால் நாங்கள் அதை எடுத்த விதத்தையும் படைத்த விதத்தையும் பார்வையாளர்கள் ரசிக்க வேண்டும். இது அறிவியலைக் கருவியாகப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு,” என்று குறிப்பிட்டார்.