‘வீரம்’ படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்த யுவினா பார்த்தவி, அஜித் ரசிகர்களை மட்டுமல்ல, அனைத்து ரசிகர்களையும் தனது சுட்டித்தனமான நடிப்பால் கவர்ந்தார்.
இனியும் யுவினாவை குழந்தை நட்சத்திரம் என்று சொல்ல முடியாது. வளர்ந்து ஆளாகி, கொள்ளை அழகுடன் காணப்படுகிறார்.
தற்போது ‘ரைட்’ என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் யுவினாதான் கதாநாயகி. மேலும், தலைப்பு வைக்கப்படாத இரண்டு தமிழ்ப் படங்களிலும் நடித்து முடித்துள்ளாராம்.
தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இவரே எதிர்பார்க்காத அளவுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன.
“இனிமேலும் என்னை ‘குழந்தை நட்சத்திரம்’ என்று கூறாதீர்கள். நான் இப்போது கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டேன்,” என்று புன்னகையுடன் பேசுகிறார் யுவினா.
‘வீரம்’ படத்தில் காணப்பட்ட அந்த அழகுச் சிரிப்பு மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
மூன்று வயதிலேயே நடிக்கத் தொடக்கிவிட்டார் யுவினா. தமிழில் உருவான ‘உறவுக்குக் கைகொடுப்போம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில்தான் இவரது அறிமுகம் நிகழ்ந்தது.
அப்போது சரியாகப் பேசக்கூட வராது என்று அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்கு தமிழ் தெரியாது என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தயாரிப்பாளர் தரப்பினர் கூறியிருந்தனர். ஏவிஎம் சரவணன் தாத்தாதான் என் நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘பாப்பா அருமையாக நடிக்கிறது’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்.
“அந்தத் தொடரில், ஆவி ஒன்று என் உடலுக்குள் புகுந்து மாமியார்போல் நடிக்க வைக்கும். அந்தத் தொடருக்கும் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன் மூலமாகத்தான் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன,” என்று சொல்லும் யுவினா, அஜித்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.
அஜித்தை ‘அங்கிள்’ என்றுதான் அழைப்பாராம். தன்னைச் சந்திக்கும் பலரும் அஜித்துடன் நடித்தது குறித்துதான் முதலில் விசாரிப்பதாகவும் சொல்கிறார்.
“படப்பிடிப்புத் தளத்தில் அஜித் அங்கிளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவேன். அவர் அனைவரிடமும் அன்பாகப் பேசுவார். சின்னக்குழந்தை என்றாலும், ‘வாங்க, போங்க’ என்று குறிப்பிட்டு, மரியாதை தருவார்.
“அவர் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் எனக்கு நல்ல நண்பர். நேரில் சந்திக்கும்போது அவரை ‘பெரிய அண்ணா’ என்றுதான் அழைப்பேன். இப்போதும் அதே பழைய பாசத்துடன் என்னிடம் நலம் விசாரிப்பார்,” என்று சொல்லும் யுவினாவுக்கு, திரைப்பட இயக்குநராகும் ஆசை உள்ளது.
சுதா கொங்குரா, ஹலிதா சலீம் வரிசையில் தானும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு நல்ல படைப்பை உருவாக்க முடியும் என்கிறார்.
“சிறு வயதில் இருந்தே நடித்து வருவதால் கேமரா, இயக்கம் குறித்தெல்லாம் ஓரளவு தெரியும். பள்ளியில் ஒருமுறை நானே ஒரு நாடகத்துக்கான கதையை எழுதி, அதை இயக்கி, நடித்தேன். அதைப் பார்த்த பலரும் ஆங்கிலப் படம் போல் இருந்ததாகப் பாராட்டினர். அப்போது முதல் இயக்குநராகும் ஆசை அதிகமாகிவிட்டது,” என்கிறார் யுவினா.
அஜித், விஜய், சூர்யா என்று பல நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், அவர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் இவரிடம் தவறாமல் கேட்கப்படுகிறதாம்.
அதற்கு, இணைந்து நடிக்க முடியாவிட்டாலும் அவர்களை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார்.
“அவர்களுடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவர்களால் என்ன மாதிரியான படங்கள் நடிக்க முடியும், எத்தகைய காட்சிகளில் அருமையாக நடிப்பார்கள் என்பதை நுட்பமாக கவனிப்பேன். அப்படித்தான் நானும் நடிக்கக் கற்றுக்கொண்டேன்,” என்று பேட்டியில் கூறியுள்ளார் யுவினா.