தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இட்லி கடை’. இப்படத்தை தனுஷ் இயக்குகிறார். ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் இசையமைப்பாளர்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு தம்பியாக அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ‘இட்லி கடை’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இதில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளார் என்று பலரும் பகிர்ந்து வந்தார்கள். ஆனால், இப்படத்தில் தான் நடிக்கவில்லை என அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அசோக் செல்வன்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் “எனக்கு தனுஷை மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். அவருடன் வருங்காலத்தில் இணைந்து பணியாற்றுவேன். ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

