அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அண்மையில் வெளியான ‘டிராகன்’ படத்தின் வசூல் நூறு கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
இதையடுத்து, படத்தின் வெற்றிவிழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதீப், இந்த வெற்றியின் மூலம், நல்ல வேலைகளைச் செய்து கொண்டிருப்பதாக தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
“நான் பார்ப்பதற்கு நடிகர் தனுஷ் போல் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். இக்கருத்து எனக்குச் சாதகமானதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.
“கண்ணாடியைப் பார்க்கும்போது நான் மட்டும்தான் தெரிகிறேன். என்னுடைய திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. நான் நடித்துள்ள இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நான் நல்ல வேலைகளைச் செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்,” என்றார் பிரதீப் ரங்கநாதன்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, தனது படத்தின் நாயகன் தன் கண்களுக்குப் பிரதீப் ரங்கநாதனாக மட்டுமே தெரிவதாகக் குறிப்பிட்டார்.
இவர் இயக்குநராக அறிமுகமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பார்த்துவிட்டு, அந்தப் படம் குறித்து தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் கடைக்கோடி தெலுங்கு ரசிகர்களையும் அந்தப் படம் சென்றடைந்தது. இதை மறவாமல் குறிப்பிட்டார் அஸ்வத்.
தொடர்புடைய செய்திகள்
“நடிகர் மகேஷ் பாபு ‘ஓ மை கடவுளே’ படத்தைப் பார்த்துவிட்டு பதிவிட்டது பெரிய விஷயம். அதன் பிறகு மொத்த தெலுங்குத் திரையுலத்தின் பார்வையும் அந்தப் படத்தின் பக்கம் திரும்பியது.
“அதேபோல், இத்திரைப்படத்தையும் அவர் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறேன். அவ்வாறு நடந்தால் நிச்சயமாக அது இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும். இத்தகவலை அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள்,” எனக் கேட்டுக் கொண்டார் அஸ்வத் மாரிமுத்து.

