தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்ததை நினைத்து பெருமைப்படுறேன்: அஸ்வத் மாரிமுத்து

3 mins read
baf5bc21-5b4f-465a-9e9b-1858ce2a84af
பெற்றோருடன் அஸ்வத் மாரிமுத்து. - படம்: ஊடகம்

‘டிராகன்’ படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் அதன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

தனது கல்லூரி வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை தன் படத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.

“நான் ‘கெத்து’ என்று கருதியவை எல்லாமே எவ்வளவு தவறு என்பது இப்போது தெரிகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் செய்த தவற்றை மற்றவர்களும் செய்துவிடக்கூடாது என்று நினைத்துதான் ‘டிராகன்’ படத்தை எடுத்தேன்,” என்று ஊடகப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்.

இந்தப் படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாபாத்திரம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

குறிப்பிட்ட ஒரு காட்சியில், ‘திரும்ப எழுந்து ஓடுப்பா... அப்பா நான் இருக்கேன்’ என்பார் அவர்.

“பிரதீப்பின் தந்தை பேசும் இந்த ஒற்றை வசனம்தான் படத்தின் ஆகப்பெரிய ஈர்ப்பாக அமைந்துவிட்டது. என் பெற்றார் சமூக ஊடகத்தில் இல்லை. யூடியூப் தளத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. மகன் என்ன செய்தாலும் நம்பும் பாசக்கார அப்பா, அம்மா,” என்று அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.

இவரது பெற்றோரின் சொந்த ஊர் நாகப்பட்டினம். படிப்பு, வேலை எனப் பல காரணங்களுக்காக குடும்பத்துடன் சென்னையில் குடியேறிவிட்டனர்.

திரையுலகில் எந்தத் தொடர்பும் இல்லாத குடும்பம். மகனை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது.

“அஸ்வத் ரொம்ப நன்றாகப் படிப்பார். ஆனால் ஜாலியாகப் படித்து, வேலை பார்க்க வேண்டும்’ எனச் சொல்லி, பொறியியல் படித்தார்.

“கல்லூரியில் அருமையான கலை நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார் அஸ்வத். அதன் பிறகுதான் இயக்குநர் ஆகும் ஆசை வந்து, குறும்படம் எல்லாம் இயக்கி ‘நாளைய இயக்குநர்’ என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

“என் மகன் மருத்துவம் படிக்க முடியாது என்று சொன்னபோது வருத்தமாக இருந்தது. `திரைப்பட இயக்குநர் ஆகப்போகிறேன்’ என்றபோது அது மேலும் அதிகமானது.

“சினிமாவில் போட்டி நிறைய இருக்கும். வெற்றி பெறுவது மிகவும் சிரமம் என்று சொன்னேன். ஆனால் அஸ்வத் உறுதியாக இருந்ததால் அவர் போக்கில் விட்டுவிட்டோம்,” என்கிறார் தந்தை மாரிமுத்து.

அதன் பிறகு ஆஸ்திரேலியா சென்று திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்தாராம் அஸ்வத்.

ஒருமுறை “உங்க மகன் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை,” எனக் கல்லூரி முதல்வர் பெற்றோரை அழைத்து கூறியுள்ளார்.

அதற்கு அஸ்வத்தின் தந்தை, `என் மகன் புத்திசாலி... படிக்கிற அளவுக்கு படிக்கட்டும். நிச்சயம் பிழைத்துக்கொள்வான்’ என்றாராம்.

“அதே கல்லூரி முதல்வர் எனது முதல் படம் ‘ஓ மை கடவுளே’ வெற்றிக்குப் பிறகு, கல்லூரி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்.

“என்னுடைய ‘டிராகன்’ படம் 90% என் கதைதான்.

எவ்வளவு கேட்டாலும் காசு கொடுத்து, ‘அப்பா நான் இருக்கேன்’ என்று சொன்னது எல்லாமே என் அப்பாதான்.

“அவர் அந்தக் காட்சிகளை திரையில் பார்த்தபோது அழுதுவிட்டார்,” என்கிறார் அஸ்வத்.

‘‘நான் கல்லூரியில் அரியர்ஸ் வைத்ததுகூட பெற்றோருக்குத் தெரியாது. நான் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள்.

“இப்படிப்பட்ட அப்பா, அம்மாவுக்குப் பிறந்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுறேன்,” என்று சொல்லும் அஸ்வத் மாரிமுத்து, அடுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்