வெற்றி தோல்வி குறித்து யோசிக்காமல் கலையை ஆராதிப்பதுதான் கலைஞர்களின் முதல் கடமை. மற்றவற்றைக் காலம் பார்த்துக்கொள்ளும் என்பார்கள்.
இந்த வார்த்தைகளைப் பின்பற்றி தமது அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
‘லால் சலாம்’ படம் வணிக ரீதியில் தோற்றபோதும் துவண்டுவிடாத ஐஸ்வர்யா, அடுத்து ‘டெக்ஸ்லா’ என்ற புதிய படத்துக்காகக் களமிறங்கிவிட்டார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறாராம். சென்னையில் நடைபெற்ற படத்தின் பூசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாலா, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் சாண்டி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகளுக்கு வாழ்த்து கூற வந்திருந்த லதா ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியபோது, பூசையில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பது ஆகச்சிறந்த தருணமாக இருக்கும். அடுத்த தலைமுறைக்கு இது புதிய ஊக்கத்தை அளிக்கும். கண்டிப்பாக இந்தப் படம் இந்தியத் திரையுலகின் மைல்கல்லாக அமையும். இருவரையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
“தமிழ் சினிமாவில் புதுவிதமான கதைகள் வருவது மிகவும் நல்லது. திரைப்படம் வெற்றிபெற படக்குழுவினர்க்கு வாழ்த்துகள்,” என்றார் லதா ரஜினிகாந்த்.
‘இசையமைப்பாளர் அனிருத் கதாநாயகனாக நடிப்பாரா?’ என்ற கேள்விக்கு, “அது அவரது விருப்பம்,” எனக் குறிப்பிட்ட லதா, அனிருத் பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞர் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘ஜெயிலர்-2’ பட வெளியீட்டுக்காக ரஜினியின் மற்ற ரசிகர்களைப் போலவே தாமும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக அவர் சொன்னார்.
ரஜினியின் அனைத்துப் படங்களுமே ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உருவாகி வருகிறது என்றார் அவர்.
“என் இளைய மகள் சௌந்தர்யா தயாரித்த ‘வித் லவ்’ திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் முதலில் இயக்கிய ‘கோச்சடையான்’ திரைப்படமே மிகப்பெரிய முயற்சிதான். ஆனால், அன்று அதற்கான திரையரங்கத் தொழில்நுட்பங்கள் இல்லாமல் போனதால் பெரிதாகப் பேசப்படவில்லை.
“எனினும், அண்மையில் நடைபெற்ற ‘ஏஐ’ மாநாட்டில் ‘கோச்சடையான்’ காட்சிகள் திரையிடப்பட்டன. பலரும் அதைப் பாராட்டினர். அந்தப் படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்படும். அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று லதா கேட்டுக்கொண்டார்.

