ஊதியம் இல்லாவிட்டாலும் நடிப்பேன்: கேத்ரின் தெரசா

2 mins read
e08fd911-abd0-4cb7-8c3e-494124f986c2
கேத்ரின் தெரசா. - படம்: ஊடகம்

கதையே இல்லாமல் போனாலும், ஊதியமே கிடைக்காவிட்டாலும் ‘அந்த’ கதாநாயகனுடன் நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தால், கொஞ்சம்கூட தயங்காமல் கால்ஷீட் ஒதுக்குவேன் என்கிறார் கேத்ரின் தெரசா.

அவர் குறிப்பிடும் ‘அந்த’ நடிகர் வேறு யாருமல்ல, நம்ம அஜித்தான்.

அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என்பதுதான் தனது நீண்டநாள் கனவு என்கிறார்.

“நான் நீண்டகால அஜித் ரசிகைகளில் ஒருவர். அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். ஆனால், தொடர்ந்து பல படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் ‘குட் பேட் அக்லி’ படத்தை இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க இருக்கிறேன்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் கேத்ரின்.

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் ‘கதகளி’, ‘கணிதன்’, ‘கடம்பன்’, ‘கதாநாயகன்’, ‘கலகலப்பு 2’ எனப் பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கேத்ரின். இப்படம் இன்று வெளியாக உள்ளது.

இதில் ‘குப்பன்’ என்ற பாடலில் இவர் போட்டுள்ள குத்தாட்டம் இளையர்களைத் துள்ள வைக்குமாம்.

“தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும், நிலையான இடம் கிடைக்கவில்லையே என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு நான் மட்டுமே காரணமல்ல.

“மெட்ராஸ்’ என்ற தரமான படத்தில் அறிமுகமானது மகிழ்ச்சி அளித்தது. ஆனால், தொடர்ந்து அதேபோன்ற நல்ல கதைக்களம் உள்ள படங்கள் அமையவில்லை,” எனச் சொல்லும் கேத்ரின், இதுவரை முப்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார்.

“திரையுலகில் வெற்றி, தோல்வியை யாராலும் எளிதில் கணித்துவிட முடியாது. எந்த படம், எந்த நேரத்தில் வெற்றி பெறும் எனத் தெரியாது. எனவே, ஒரு நடிகையாக வெற்றி, தோல்வி இரண்டுக்கும் பழக வேண்டும். இல்லையென்றால், நமக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியாது.

“என்னைப் பொறுத்தவரையில், நடிகையாக நான் இருப்பது எனக்கான நிரந்தர வேலை இல்லை. அதனால் அடுத்த ஊதியம் என்பது எப்போது வரும் எனச் சொல்ல இயலாது. எனவே, வெற்றி, தோல்விகளை உணர்வுபூர்வமாகக் கருதாமல் இயல்பாக இருக்க வேண்டும்.

“மனித வாழ்க்கையில் இவை இரண்டும் அவ்வப்போது வந்துபோகக் கூடியவைதான். ஆகையால், நாம் முன்னேறிச் செல்ல எந்த அளவுக்கு உழைக்க வேண்டுமோ, அதைச் சரியாகச் செய்ய வேண்டும்,” என்கிறார் கேத்ரின் தெரசா.

குறிப்புச் சொற்கள்