தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஊடகங்களிலிருந்து விலகியதால் நிம்மதியாக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன்

3 mins read
8b9fead5-cd4e-4808-a508-b9dd30bdc18e
நடிகர் சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இரண்டு படங்களுமே தனது திரை வாழ்க்கையில் முக்கியத்துவம் உள்ள படங்களாக மாறும் என்று எதிர்பார்த்து அதற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அதற்கு காரணம் அவர் கடைசியாக நடித்திருந்த ‘அமரன்’ திரைப்படம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. உலகளவில் மொத்தம் 350 கோடி ரூபாய் வரை அந்தப் படம் வசூலித்ததாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சம் அடைந்தது. ‘அமரன்’ மற்றும் அதற்கு முன்பு நடித்த ‘அயலான்’, ‘மாவீரன்’ படங்களுக்கு அவர் 10 முதல் 20 கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றதாகவும் ‘அமரன்’ வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்வரை உயர்த்திவிட்டதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியத்தில் இருக்கிறது.

‘அமரன்’ வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு முருகதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இன்னும் சில நாள்களில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. எனவே, சிவாவை வைத்து இத்தனை ஆண்டு தோல்விக்கு ஒரு வெற்றி கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர்.

அதேபோல் சூர்யாவை வைத்து ‘புறநானூறு’ படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக இருந்தார். ஆனால், சூர்யா படத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை அணுகினார் சுதா. சிவாவும் ஒத்துக்கொண்டதைத் தொடர்ந்து ‘புறநானூறு’ படம் ‘பராசக்தி’ என்று பெயர் மாற்றம் கண்டது. அண்மையில் வெளியான படத்தின் பெயர், முன்னோட்டக் காட்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. நிச்சயம் இந்தப் படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ‘என்றென்றும் புன்னகை’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அஹமது, அண்மையில் சிவாவை சந்தித்து கதை சொன்னதாகவும் அது அவருக்குப் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு பேரும் இணையவிருக்கிறார்கள் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கோலிவுட்டிலிருந்து தகவல்கள் பரவுகின்றன.

இதற்கிடையே ‘அமரன்’ பட சமயத்திலேயே சிவகார்த்திகேயன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியிருந்தார். இடையில் அவ்வப்போது ஒரு சில பதிவுகள் மட்டும் போட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் அதுகுறித்து பேசுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நான் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்திவிட்டதால் எனக்கு நல்லவிதமான தெளிவு கிடைத்திருக்கிறது.

“சமூக ஊடகங்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளைக் கூறுகிறார்கள். அப்படி அவர்கள் கூறும் கருத்துகளால் எனக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்று முன்பு சமூக ஊடகங்களில் தேடி, பலவிதமாக கருத்துகளால் குழம்பிப் போனதுதான் மிச்சம். தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. எனவேதான் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன்.

“இப்போது மனம் இலேசாக இருக்கிறது. ஏகப்பட்ட தேவையற்ற எண்ணங்கள் மனத்திற்குள் ஓடுவதைக் குறைக்க முடிகிறது,” என்றார் சிவகார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்