தெலுங்கில் தொடர் வாய்ப்புகளைப் பெற்று வரும் நடிகை வரலட்சுமி, இயக்குநராகும் கனவுடன் ‘சரஸ்வதி’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். படத் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றுடன் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.
தமன் இசையமைக்கும் இந்தப் படம் குறித்து அண்மையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தாம் இயக்குநராக வேண்டும் எனத் தம்மைவிட அதிகம் விரும்பியது இயக்குநர் பாலாதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
“இயக்குநர் பாலா, நானும் அவரைப் போல் படம் இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கூறி வந்தார். ‘நீ நடிப்பில் என்ன சாதிக்கப் போகிறாய் என்பது தெரியவில்லை. ஆனால், படம் இயக்க வேண்டும்’ என்று பார்க்கும்போதெல்லாம் அறிவுறுத்துவார். அவர்தான் என்னுடைய குருநாதர்.
“படம் இயக்கப்போவதாக அவரிடம் கூறியபோது, திருமணம் செய்து கொண்டபோது இருந்ததைவிட அவர் அதிக மகிழ்ச்சி அடைந்தார்,” என்று வரலட்சுமி கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட கதை இவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். கடந்த ஆறு மாதங்களாகவே இந்தக் கதையைத் தாமே இயக்கலாமா என யோசித்து வந்ததாகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“எனினும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அதே திரைக்கதையைப் பயன்படுத்தவில்லை. அதில் நிறைய மாற்றங்களைச் செய்தேன்.
“ஒரு குறிப்பிட்ட வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத் தேர்ந்தெடுத்து மேலும் விரிவாக்கினேன். மூத்த நடிகர்களுக்கு கதை சொல்லும்போது, அவர்கள் கதையை சுவாரசியமாகக் கேட்டது மனத்தில் ஒருவித பரவசத்தையும் நல்ல உணர்வையும் ஏற்படுத்தியது.
“மூத்த கலைஞர்கள் என்னுடன் இணைந்திருப்பதன் மூலம் நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை உறுதி செய்துகொள்ள முடிவதாகக் கருதுகிறேன்,” என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
‘சரஸ்வதி’ படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் சிலர் பின்னர் இணைய உள்ளனர்.
“நல்ல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும்போது அவர்கள் வழங்கும் சிறப்பான நடிப்பால் ஓர் இயக்குநரின் பணியில் 80 விழுக்காடு எளிதில் முடிந்துவிடும் என நினைக்கிறேன்,” என்கிறார் வரலட்சுமி.

