இயக்குநர் செல்வராகவன் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.
மண்வாசனை கொண்ட படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்தை விடுத்து தனக்கென ஒன்றை உருவாக்கியவர்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே போன்ற படங்களை ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்த் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தமது மனத்தில் பட்ட கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வரும் அவர், அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் மிக சுவாரஸ்யமான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு 50% நிறைவடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அனிதாவின் காதலை மீண்டும் ரசிகர்கள் காண காத்திருப்பதாகவும் ரசிகர்களுக்குப் பிடித்த அந்த பழைய செல்வராகவனை அவர்கள் அப்படத்தில் காணலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 2ஆம் பாகம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முதல் பாகம் திரைக்கு வந்து வெற்றி பெறாமல் போனது. அப்போது ரசிகர்கள் மீது மிகவும் கோபத்தில் இருந்தேன். ஆனால், தற்போது அப்படத்தை அவர்கள் கொண்டாடும் போது தனிமையில் இருப்பது போல் தோன்றுகிறது,” என்றார் செல்வராகவன்.
“அப்படத்தை மறுவெளியீடு செய்தபோது படத்தைத் திரையில் பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளில் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டபோது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களது அன்பு ஒரு பக்கம் ஆறுதலைத் தந்தாலும் மறுபக்கம் தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவு மனத்திற்கு காயத்தைத் தருகிறது. சில ரசிகர்கள் என்னிடம் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை எப்போது இயக்குவீர்கள் எனக் கேட்கின்றனர், ” என உருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுகுறித்து நானும் தனுசும் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம் எனக் கூறிய அவர், கார்த்தி இல்லாமல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ 2ஆம் பாகத்தை எடுக்க முடியாது என்றார்.
“அப்படத்திற்காக ரசிகர்கள் குறைந்தது ஓர் ஆண்டிற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டும். அதை இயக்க நான் காத்திருக்கிறேன்,” என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

