தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது. அப்போது பேசிய நடிகர் விஜய் உங்களுடன் திரைத்துறை மூலம் 33 ஆண்டுகள் இருந்துவிட்டேன். இனி வரும் 33 ஆண்டுகளில் அரசியல் மூலம் உங்களுடன் இருப்பேன் என்று மறைமுகமாகப் பேசினார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகித் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். ஒரு தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வெளிநாட்டில் இத்தனை ஆயிரம் மக்கள் கூடுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சாதனையைப் பாராட்டும் விதமாக ‘மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ், மேடையிலேயே விஜய்யிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
“லியோ-2’ எப்போது என்று கேட்டால், அவர் ‘ப்ளடி ஸ்வீட்’ என்றுதான் சொல்லியிருப்பார். இது உங்கள் இறுதிப் படம் என்பது வருத்தமாக உள்ளது,” என்றார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இயக்குநர் அட்லி பேசுகையில், “நான் உதவி இயக்குநராக இருந்தபோதே என்னிடம் கதை கேட்டவர் விஜய் அண்ணா. என் வெற்றியின் காரணம் அவர்தான்,” எனக் கூறி மேடையில் விஜய்யைக் கட்டிப்பிடித்தார்.
இயக்குநர் நெல்சன், “‘பீஸ்ட்’ விமர்சனங்களுக்குப் பிறகு, நான் நன்றாக இருக்கிறேனா என்று அக்கறையுடன் விசாரிப்பார். ஒரு படம் நம் நட்பைத் தீர்மானிக்காது என்று கூறி எனக்கு ஆறுதல் அளித்தார்,” என நெகிழ்ந்தார்.
‘ஜனநாயகன்’ படத்தை இயக்கிய இயக்குநர் எச். வினோத், “‘ஜனநாயகன்’ ஒரு மறுபதிப்பு படம் என்பதால் பலருக்கும் சந்தேகம் உள்ளது. பழைய படத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்குமா என்று யோசிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஐயா, இது நூறு விழுக்காடு தளபதி படம்! உங்களுக்கு கொண்டாட்டமும் சிந்தனையும் கலந்த விருந்து படத்தில் காத்திருக்கிறது,” என்று உறுதி அளித்தார்.
விழாவின் சிகர நிகழ்வாக அமைந்த விஜய்யின் உரை, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
இசையமைப்பாளர் அனிருத்தை ‘MDS’ (Musical Departmental Store) என வர்ணித்த விஜய், “அந்த ஸ்டோருக்குள் போனால் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வரலாம், அவர் என்னை ஏமாற்றியதே இல்லை.
“வில்லன் பாபி தியோலின் படங்களைப் பார்த்துதான் நாங்கள் ‘பிரியமுடன்’, ‘வில்லு’ படங்களை எடுத்தோம். அவரிடமே, ‘சார் உங்களுக்கே தெரியாமல் உங்கள் படங்களைச் சுட்டுவிட்டோம்’ என்று விளையாட்டாகச் சொன்னேன்,” எனக் கூறி கலகலப்பூட்டினார்.
“பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவின் மோனிகா பெலூசி. நாயகியை விட எனக்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ‘கில்லி’ படத்திலிருந்தே சிறப்பாக இருக்கிறது,” என்றார்.
இறுதியாகத் தனது ரசிகர்கள் குறித்துப் பேசிய விஜய், “நான் அறிமுகமான நாளிலிருந்து 33 ஆண்டுகளுக்கும் மேலாக என் கூடவே பயணித்த ரசிகர்களுக்கு உதவ அடுத்த 33 ஆண்டுகளுக்கு நான் இருக்கிறேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்கு, நான் என் சினிமாவையே விட்டுக்கொடுக்கிறேன்,” என்று கூறியபோது அரங்கம் அதிர்ந்தது.
மலேசியக் காவல்துறை அரசியல் கட்சிக் கொடிகளுக்குத் தடை விதித்திருந்த போதிலும், ரசிகர்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏந்தி முழக்கமிட்டனர். இதைக் கவனித்த விஜய், உடனடியாகச் சைகை காட்டி அவர்களை அமைதிப்படுத்தினார்.
இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, வரும் வார விடுமுறை தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

