தனது குடும்பத்தின் எதிர்கால வாழ்க்கைக்காக முடிந்தவரை கடுமையாக உழைத்துச் சம்பாதித்து வருவதாகக் கூறியுள்ளார் நடிகர் மாதவன்.
ஒரு மனிதன் தனக்கென உருவாக்கிக்கொண்ட வாழ்க்கையைப் பராமரிப்பதற்கு ஓடியோடி சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“நடிகர்களாகிய எங்களுக்கெல்லாம் ஓய்வூதியம் என எதுவும் கிடையாது. சில படங்களில் நடிப்பதற்காகப் பேசப்பட்ட ஊதியம் கிடைக்காமல் போகலாம்.
“எனவே, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போதே எதிர்கால வாழ்க்கைக்கும் குழந்தைகளுக்கும் மொத்த குடும்பத்துக்கும் எனத் தேவையான பணத்தைச் சம்பாதித்துவிட வேண்டும்.
“நான் நடித்த ‘3 இடியட்ஸ்’, ‘ரங் தே பசந்தி’, ‘தனு வெட்ஸ் மனு’ ஆகிய மூன்று படங்களில் பெற்ற ஊதியமே என் குழந்தைகள் நன்றாக வாழப் போதும்தான். ஆனால், அந்தப் பணத்தை அவர்கள் சரியாகக் கையாண்டால்தான் நிலைக்கும். இல்லையென்றால் சிரமம்தான்,” என்று அந்த நேர்காணலில் மாதவன் கூறியுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் இளம் வயதிலேயே தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியது, உச்சத்தில் இருக்கும்போதே நன்றாகச் சம்பாதிக்கத்தான் என்று சுட்டிக்காட்டிய மாதவன், அவரது வழியைப் பின்பற்றி தயாரிப்பு நிறுவனம் தொடங்கவில்லை என்றாலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையத்தொடர் எனப் பல்வேறு தளங்களில் முடிந்த அளவு உழைத்துச் சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தை இயக்கியும், நடித்தும் கவனம் ஈர்த்திருந்தார் மாதவன். இதையடுத்து, இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.