நான் பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன்: நடிகர் சூர்யா

நான் பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன்: நடிகர் சூர்யா

1 of 2
படம்: விகடன்
படம்: இந்தியா நியூஸ்

14 Aug 2026 - 2:47 pm

2 mins read

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) திரைக்கு வருகிறது.

இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படக்குழுவினர் பங்கேற்ற நேர்காணல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

அதில், தாம் திரையுலகிற்கு வந்தது குறித்துப் பேசிய சூர்யா, “ஆரம்பத்தில் வீட்டில் இருந்த நிதி நெருக்கடி காரணமாகப் பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தேன்,” என்று குறிப்பிட்டார்.

“நான் திரைப்படங்களில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. கேமராவுக்கு முன்னால் நிற்கப்போகிறேன் என ஐந்து நாள்களுக்கு முன்பு வரை எனக்குத் தெரியாது. அதற்காக எந்தத் தயாரிப்பும் நான் செய்யவில்லை.

“எல்லாவற்றையும் கேமராவின் முன்னால்தான் கற்றுக்கொண்டேன். ஆனால், அதுவே ஒரு பொறுப்பாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் வீட்டில் ஒரு பிரச்சினை இருந்தது. அதனால் பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தேன்.

“ஆனால், எனக்குத் தொடர்ந்து நிபந்தனையற்ற அன்பு கிடைத்தது. நான் தவறு செய்தபோதும், நான் கீழே விழுந்தபோதும், மோசமாகச் செயல்பட்டபோதும், அனைத்தையும் பாழாக்கியபோதும்கூட எனக்கு அந்த அன்பு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. அதனால், நான் பொறுப்புடன் நடந்து கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.

தமது திரைப்பயணத்தின் தொடக்கக் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்தார். “என் நண்பருடன் ஒரு அமைச்சரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் என்னைச் சிவகுமாரின் மகன் எனக் குறிப்பிட்டு, அவரைப் போலவே நடிப்பாய் எனக் கூறினார்.

“அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தந்தையைப் போல நடிப்பதைத் தவிர்க்க எண்ணி, அவருடைய படங்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். அச்சம்பவமே எனக்கான தனிப்பாதையை உருவாக்கத் தூண்டியது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதே நேர்காணலில் நடிகை மமிதா பைஜூவிடம் சூர்யாவின் எந்தப் படத்தை முதன்முதலில் பார்த்தீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தைப் பார்த்தேன்,” எனப் பதிலளித்தார்.

உடனே குறுக்கிட்ட நடிகை ராதிகா சரத்குமார், “இதைக்கேட்காமலேயே இருந்திருக்கலாம்,” என்று நகைச்சுவையாகக் கூறியது சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
பணம்நடிகர்சூர்யாஇயக்குநர்