பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்: சிவகார்த்திகேயன்

2 mins read
f7978648-3882-4cfa-93ba-c66c6f7d86db
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

பெண்களைத் திரைப்படங்களில் பொறுப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தாம் நடித்த ‘மாவீரன்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என இரண்டு படங்களில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன், இப்பேட்டியில் தனது கடந்த கால வாழ்க்கை, திரைப்பயணம் குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

“பொதுவாக இரண்டாவது பாகம் என்றாலே எனக்குப் பயம்தான். நல்ல படத்தை இரண்டாவது பாகம் எடுத்து, கெடுக்க வேண்டாம் என்றுதான் நினைப்பேன். ஆனால், ‘மாவீரன்’ படம் குறித்து யோசிக்கும்போது என் முடிவை மாற்றிக்கொண்டேன்.

“எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். குழந்தைகளைக் கொஞ்சுவது மட்டும்தான் என் வேலை. அவர்களை முழுப் பொறுப்போடு பார்த்துக்கொள்வது என் மனைவிதான். அவருக்குத்தான் உண்மையான வலி தெரியும்.

“நான் மிகவும் கண்டிப்பான அப்பாவும் கிடையாது. முதலில் என் குழந்தைகள் என்னைப் பார்த்துக் கொஞ்சம் பயந்தனர். அப்புறம் ‘அப்பா எதுவும் பண்ணமாட்டார்’ என்று அவர்களுக்கே புரிந்துவிட்டது. மிகவும் ஜாலியான அப்பா என்றால் அது நான்தான்.

“பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். பொறுப்புடன் படம் எடுக்க வேண்டும்.

“உண்மையில் தொடக்கத்தில் பெண்களைக் கம்பீரமாக, மரியாதையாகக் காட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. நானும் அதைப் பற்றியெல்லாம் யோசித்ததில்லை.

“ஆனால், நாம் செய்த தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வது, புரிந்துகொள்வது, படித்துத் தெரிந்துகொள்வது, என்னுடைய முந்திய படங்களில் செய்தவற்றைத் திருத்திக்கொள்வது எனக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறினேன்.

“நான் தயாரித்த ‘கனா’ திரைப்படத்தில் இருந்துதான் அந்த எண்ணம் மாறியது. படம் பார்த்தவர்கள் பெண்ணின் கதையை, கனவை, வாழ்வைச் சொன்னதற்காக குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். அதிலிருந்து பெண்களைச் சரியாக, பொறுப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என்பதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன்.

“குழந்தைகள், பெண்கள் நம் படத்தைப் பார்க்கிறார்கள். அந்தப் பொறுப்புடன் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் நிலைத்துவிட்டது.

“என் முதல் மகனுக்கு நான்கு வயதாகிறது. இரண்டாவது மகனுக்கு ஒரு வயதாகிறது. (சிரித்துக்கொண்டே) இந்திய மக்கள் தொகைக்கு நான் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்.

“படப்பிடிப்புத் தளங்களில் மோசமான அளவில் மன அழுத்தம் ஏற்பட்டு, வீட்டை அடையும்போது என்னுடைய குழந்தைகள்தான் என் மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்விப்பார்கள்.

“நான் இப்போது என் மகள் ஆராதனாவுக்கு நண்பனாக இருக்கிறேன். சினிமா துறையைப் பொறுத்தவரை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வேலை இருக்கும்.

“திடீரென, ஒரு மாதத்திற்கு உங்களுக்கு விடுப்பு கிடைக்கும். அப்போது குடும்பத்திற்காக என் நேரத்தைச் செலவிடுகிறேன்.

“ஆனால், நான் தொலைக்காட்சியில் இருந்தபோது கிடைத்த அனுபவங்கள் கடினமானதாகவே இருந்தன. என் குழந்தைகளிடம் இருந்து கிடைக்கும் அன்பு மிக உண்மையானது. எனக்கும் அந்த உண்மையான அன்புதான் தேவை,” என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்