மீனவனாக நடித்ததைப் பாக்கியமாக நினைக்கிறேன்: சூரி

மீனவனாக நடித்ததைப் பாக்கியமாக நினைக்கிறேன்: சூரி

2 mins read
afa159b9-9f79-4c93-a086-50697e5c0b36
முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன்னை முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டுமல்லாது, உணர்வுபூர்வமான காட்சிகளிலும் சூரியின் நடிப்பு வியக்க வைக்கிறது. - படம்: சினிரிப்போர்ட்டர்ஸ்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் காட்சியைச் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு இணைந்து பார்த்த நடிகர் சூரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இந்தப் படத்திற்காக வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உட்பட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக படத்தின் வெற்றியைக் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “படம் வெற்றி பெறும் என்ற மன உறுதியோடுதான் பல மாதங்களாகக் கடலில் கிடந்தோம். நாங்கள் உண்மையிலேயே கஷ்டப்பட்டு உழைத்தோம். அந்த உழைப்பிற்கு இன்று நல்ல பலன் கிடைத்துள்ளது,” என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

“திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இப்படத்தின் ஒட்டுமொத்த வெற்றியையும் கடலோர மீனவர்களுக்கும் எனது குடும்பத்தினருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

“திரையில் ஒரு மீனவனாக நடித்ததை நான் மிகுந்த பாக்கியமாக நினைக்கிறேன்,” என்று நடிகர் சூரி உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.

அவரது இந்தக் கருத்துகள் தற்போது திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மண்டாடி விமர்சனம்

நகைச்சுவை நடிகராக வலம்வந்து, ‘விடுதலை’, ‘கருடன்’ படங்கள் மூலம் கதாநாயகனாகத் தடம் பதித்த நடிகர் சூரி, மீண்டும் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘மண்டாடி’. 

நாகப்பட்டினம் பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரியப் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடலையே நம்பி வாழும் மீனவச் சமூகத்தின் பின்னணியில் கதை நகர்கிறது.

கடலில் நடக்கும் பாரம்பரியப் படகுப் போட்டி (மண்டாடி), அதில் ஏற்படும் போட்டி, பகைமை, குற்ற உணர்ச்சியில் இருந்து ஒரு மனிதன் எவ்வாறு மீண்டு வருகிறான் என்பதைச் சண்டைக்காட்சியின் வழி உணர்வுபூர்வமான பின்னணியில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன்.

முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன்னை முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டுமல்லாது, உணர்வுபூர்வமான காட்சிகளிலும் சூரியின் நடிப்பு வியக்க வைக்கிறது.

மதிமாறன் புகழேந்தியின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் உருவாகியுள்ள படத்தில் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி. வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் சத்யராஜ், கதையின் முக்கியத் தூணாக நின்று கம்பீரமான குரலாலும், அனுபவ நடிப்பாலும் படத்தின் கனத்தைக் கூட்டுகிறார்.

வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிகர் சுஹாஸ் மிரட்ட, கதையோட்டத்திற்குத் தேவையான நேர்த்தியான நடிப்பை மஹிமா வழங்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஜி. வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை. கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப பின்னணி இசை துடிப்பாக அமைந்து காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

கடலின் பிரம்மாண்டத்தையும், ஆபத்தான படகுப் போட்டிக் காட்சிகளையும் உண்மைத்தன்மையுடன் படம்பிடித்துள்ள ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
நடிகர்திரைப்படம்செய்தியாளர்திரையரங்குமீனவர்கள்