“அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் அழுதேன்,” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான எம்பி சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தகம் இதுவரை ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. இதையடுத்து சென்னையில் வெற்றிவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது இலக்கிய அனுபவங்கள் குறித்து பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இந்த நிகழ்ச்சியில் ஒரு நடிகன் பேச வேண்டுமென்றால் நடிகர் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். எவ்வளவு படித்தவர், மகாபாரதம், திருக்குறள் என எதைப்பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார். இல்லையென்றால் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம். அவரும் எவ்வளவு பெரிய அறிவாளி, படித்திருக்கிறார், படித்துக்கொண்டே இருக்கிறார்.
“அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த 75 வயதிலும் குளிர்கண்ணாடி போட்டுக்கொண்டு ‘ஸ்லோ மோஷ’னில் நடந்துவரும் இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்கிறார்கள் என யாராவது நினைப்பார்கள் என்றும் யோசித்தேன்.
“இந்த உலகமே புத்தகங்களால் இயங்குகிறது. கதை இல்லாதவர்கள் என இந்த உலகில் யாரும் இல்லை.
“புத்தகம் வாசிப்பது அருமையான அனுபவம். ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம். அப்போது வாசிக்க ஆரம்பித்தது. அம்புலி மாமாவில் தொடங்கி வெங்கடேஷ் ஐயங்கார், கே.வி ஐயர், ஜி.பி ராஜரத்தினம், கைலாசம் என இவர்கள் எல்லாம் மிகப்பெரும் நாவலாசிரியர்கள்.
“பைலப்பா என்பவர் எழுதிய ‘பர்வா’ எனும் நாவல் சீனா, ஜப்பான் என 36 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. அருமையான புத்தகம். தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஜாவர் சீதாராமன் தொடங்கி ஜானகிராமன், பார்த்தசாரதி, சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ்குமார், ஜெயகாந்தன் எனப் பலரின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். தமிழில் எனக்குப் பிடித்த நாவலாசிரியர்களில் ஒருவர் ஜெயகாந்தன்.
தொடர்புடைய செய்திகள்
“அவர் குப்பம் சார்ந்து நாவல் எழுதினால் அவர் குப்பத்தில் பிறந்திருப்பாரோ என்றும் பிராமணர் கதை நாவல் எழுதினால் அவர் பிராமணரோ என்றும் தோன்றும். ‘யாருக்காக அழுதான்’ என்ற அவரின் புத்தகம் வாசித்து நான் அழுதேன். அந்த மாதிரியான புத்தகம்.
“அதற்குப் பிறகு மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகம்.
“நல்ல புத்தகங்களைப் பார்த்தால் அப்படித்தான். நானும் என் ஓய்வுக்குப் பிறகு படிக்க வேண்டும் என எடுத்து வைத்திருக்கிறேன். அதில் ‘வேள்பாரி’ புத்தகமும் ஒன்று.
“என் குரு கல்கியைப் பார்க்க முடியவில்லை. இப்போது இருக்கும் இந்தக் கல்கியைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி,” என்றார் ரஜினி.