தமிழ்த் திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளில் விஷால், வரலட்சுமி சரத்குமார் ஜோடியும் ஒன்று.
இத்தனைக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் இருவரும் சுந்தர்.சி இயக்கிய ‘மதகஜராஜா’ எனும் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் இடையே நட்பு உருவாகக் காரணமாக அமைந்த இந்த ‘மதகஜராஜா’ படம் அண்மைய பொங்கல் திருநாளில் (ஜனவரி 14) வெளியாகி, வெற்றிப் படமாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படத்திற்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வரலட்சுமி குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் விஷால்.
“கடந்த 12 ஆண்டுகளாக அன்பான தோழியாக இருந்து வரும் வரலட்சுமி, ஏதோ குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள்போல அப்படியே புத்துணர்ச்சியோடு இருக்கிறார்.
“ஒரே ஒரு படத்தில்தான் நான் அவருடன் சேர்ந்து நடித்திருந்தாலும்கூட ஏதோ கல்லூரியில் படித்து நண்பர்களாக இருப்பது போல் நாங்கள் பழகுவோம். நான் பல பிரச்சினைகள், தடைகளைச் சந்தித்து இருக்கிறேன். ஆனால், எப்போதும் அழும் பழக்கம் மட்டும் கிடையாது.
“கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டிச் சென்று விடலாம் என எனக்கு நானே பேசி தைரியம் சொல்லிக் கொள்வேன்.
“ஆனால், நான் முதன்முறையாக கண்கலங்கியது ‘ஹனுமன்’ படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சியைப் பார்த்துத்தான். அதற்கு திரையரங்குகளில் ரசிகர்களிடம் கிடைத்த கைத்தட்டலை பார்த்து நான் கண் கலங்கினேன்,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இதற்கு முன்பு நான் மேடையில் பேசியபோது என் கை, கால்கள், உடம்பில் ஏற்பட்ட நடுக்கம் பற்றி உலக அளவில் செய்திகளைக் கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி.
“நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மீண்டு வரவேண்டும் என்று பலர் என்னை அழைத்துக் கூறினர். என்னை எவ்வளவு பேர் மனதார நேசிக்கின்றனர் என்று அப்போது தெரிந்துகொண்டேன்.
“நான் போதைக்கு அடிமையாகி விட்டதாகவும், நரம்புத்தளர்ச்சி காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் வதந்தி பரப்பியவர்களும் உள்ளனர். இனி விஷாலுக்கு எதிர்காலம் இல்லை என்றார்கள்.
“இன்று எல்லாவற்றையும் கடந்து மீண்டு வந்துள்ளேன். அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன், அஜய் ஞானமுத்து ஆகியோர் இயக்கத்தில் நடிக்கிறேன். ‘துப்பறிவாளன் 2’ படத்தை நானே இயக்கி நடிக்கிறேன். மீண்டும் சுந்தர்.சியுடன் பணியாற்ற காத்திருக்கிறேன். ‘மதகஜராஜா 2’ உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்றார் விஷால்.
‘மதகஜராஜா’ படத்தில் நடித்த பின்னர், வரலட்சுமி-விஷால் நட்பு நெருக்கமாகி பல நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாகவே சென்று, காதல் கிசுகிசுக்களில் சிக்கினர். இருவரும் அதை மறுக்காததால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நீண்ட நாள்களாக பேச்சு ஓடியது.
அதன் பிறகு விஷால் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் திருமணம் நடைபெறாமலேயே நின்றுவிட்டது. அந்த நிகழ்வுக்குப் பிறகு விஷாலிடம் இருந்து ஒதுங்கிய வரலட்சுமி சரத்குமார், அண்மையில் தனது நீண்ட நாள் நண்பரான நிக்கோலஸ் சக்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.