அன்று அழுதேன்; இன்று பாக்கியம் பெற்றவளாக உணர்கிறேன்: மமிதா பைஜூ

அன்று அழுதேன்; இன்று பாக்கியம் பெற்றவளாக உணர்கிறேன்: மமிதா பைஜூ

1 of 2
படம்: பின்டர்ரஸ்ட்
படம்: பின்டர்ரஸ்ட்

14 Aug 2026 - 2:35 pm

2 mins read

நடிகர் சூர்யா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மமிதா பைஜூ தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“2015ல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நடிகர் சூர்யா கேரளாவில் உள்ள லூலு மாலுக்கு வந்திருந்தார். அப்போது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்; என் அண்ணன் 11ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்.

“என் அண்ணனும், அவரது நண்பர்களும் லூலு மாலுக்குச் சென்று சூர்யாவைப் பார்த்தார்கள்.

“ஆனால், என்னால் அங்குச் செல்ல முடியவில்லை; நான் சூர்யாவைப் பார்க்கமுடியவில்லையே என்று அழுதுகொண்டிருந்தேன்.

“நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அங்குச் செல்வது என்பது அவ்வளவு சுலபமன்று. அதனால் அம்மா, அப்பா என்னை விடவில்லை,” என்றார் அவர்.

மேலும், “என் அண்ணன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்; எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது,” என்று கூறினார்.

தற்போது தமது நிலைமை மாறியுள்ளதாகக் கூறிய அவர், “இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அதே லூலு மாலில் சூர்யாவுடன் வந்து நிற்கிறேன்,” என்றார்.

அத்துடன், “அவருடைய படத்தில் நடித்து இங்கு வந்து நிற்பதை மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்,” என்று மமிதா பைஜூ நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அவர் பகிர்ந்துகொண்ட இந்த உணர்வுபூர்வமான நினைவுகள் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்
நடிகைசூர்யாதிரைப்படம்நினைவு தினம்