பிரயாக்ராஜ்: இந்தியாவில் தற்போது அரங்கேறிவரும் மகா கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்சம் விற்று வந்த மோனாலிசா என்ற பெண் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமடைந்தார்.
காந்தக் கண்களைக் கொண்டுள்ள இவர் இப்போது இந்திப் பட இயக்குநர் சனோஜ் மிஷ்ராவின் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதற்கு மோனாலிசா பல கோடி ரூபாய் பெற்றிருப்பதாக வதந்திகள் எழுந்தன.
அந்த வதந்திகளை மறுத்துள்ளார் மோனாலிசா.
“இது தவறான தகவல். நான் இன்னும் பணம் பெறவில்லை. படத்துக்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. படப்பிடிப்பே தொடங்காதபோது எப்படி பணம் வழங்கப்படும்?” என்றார் இந்த மயக்கும் கண்ணழகி.
சனோஜ் மிஷ்ரா தனது வீட்டுக்கு வந்ததாகவும் படத்துக்குத் தன்னை ஒப்பந்தம் செய்ததாகவும் மோனாலிசா தெரிவித்தார். இனி நடிப்பு வகுப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“அதற்குப் பிறகு படத்தில் நடிக்கும்போது பணம் கிடைக்கும்,” என்று இடிவி பாரத் ஊடகத்திடம் கொடுக்கப்பட்ட காணொளியில் மோனாலிசா குறிப்பிட்டுள்ளார். மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் விற்கச் சென்ற தனக்கு கடவுளின் ஆசியும் மக்களின் ஆசியும் இருந்ததால்தான் திடீரெனப் பிரபலமடைந்ததாகக் கூறி நன்றி தெரிவித்துக்கொண்டார் மோனாலிசா.
மோனாலிசா ஒப்பந்தமாகியிருக்கும் படத்தின் பெயர் ‘தி டயரி ஆஃப் மணிப்பூர்’.