“நான் திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதுதான் முதன்முறையாக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதைவிட என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் வேறு எதுவும் இருக்கமுடியாது,” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் நித்யா மேனன்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்திருப்பதற்காக விருது கிடைத்திருப்பது கூடுதல் மனநிறைவு அளிப்பதாகவும் சொல்கிறார்.
“எனக்கு விருது கிடைத்த தகவலை முதலில் தெரிவித்தது தனுஷ்தான். தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘வாழ்த்துகள்’ என அவர் சொன்னபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. எதற்காக திடீரென வாழ்த்து சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது, ‘விவரம் தெரியாதா. சோபனாவுக்கு (‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நித்யா ஏற்று நடித்த கதாபாத்திரம்) தேசிய விருது கிடைத்திருக்கிறது’ என்றார். அதன்பிறகே என் வீட்டாருக்கும் விவரம் தெரிவித்தேன்,” என்று சிறு குழந்தையின் உற்சாகத்துடன் விவரிக்கிறார் நித்யா.
‘திருசிற்றம்பலம்’ படப்பிடிப்பின்போதே இந்தப் படம் தனக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம் தனுஷ். அவரது அந்த வார்த்தைகள் உண்மையாகிவிட்டதாகச் சொல்கிறார் நித்யா.
தென்னிந்திய மொழிகளில் கதைகளைத் தேர்ந்தெடுத்துதான் ஒப்புக்கொள்கிறீர்கள்போல் இருக்கிறதே?
“உண்மைதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிக்கிறேன். ஒங்வொரு பட உலகிலும், ‘ஏன் தங்கள் மொழியில் கவனம் செலுத்துவதில்லை’ எனக் கேட்கிறார்கள்.
“ஒரு கதையைக் கேட்ட அந்த நொடியிலேயே இந்தக் கதையை தவறவிட்டுவிடக் கூடாது என்று தோன்றும். அப்படிப்பட்ட கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். இந்தியிலும் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. அங்கும்கூட இதைத்தான் எனது கொள்கையாகப் பின்பற்றி வருகிறேன்,” என்கிறார் நித்யா.
தொடர்புடைய செய்திகள்
எந்த மொழிப் படம், யார் நாயகன், எந்த நட்சத்திரக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள், எவ்வளவு ஊதியம் என்று எது குறித்தும் இவர் கவலைப்பட்டதில்லையாம். நல்ல கதை அமைந்தால் இவை அனைத்துமே தமக்கு இரண்டாம் பட்சம்தான் என்கிறார்.
நித்யாவின் குடும்பம் கேரளாவில் வசிப்பதாக பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்க, அவரது குடும்பமோ பெங்களூரில் வசித்து வருகிறது. ஆனால் நித்யாவுக்கு மிகவும் பிடித்த இடம் சென்னைதானாம்.
“என் தந்தை தமிழ் வழியில் படித்தவர். அதனால் திருக்குறளை உதாரணம் காட்டித்தான் பேசுவார். அம்மாவும் நன்றாகத் தமிழ் பேசுவார். வீட்டிலும் தமிழ்தான் பேசிக்கொள்வோம்,” என்று சொல்லும் நித்யா மேனன், தாம் எதையுமே திட்டமிட்டுச் செய்வதில்லை என்கிறார்.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஒரு கதைக்குத் தம்மால் எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும் என்பதில்தான் இவரது முழுக்கவனமும் இருக்குமாம். பாராட்டும் அங்கீகாரமும் கிடைப்பதற்காக தாம் நடிப்பதில்லை என்று குறிப்பிடுபவர், திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்போது மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார்.
“பாடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு தனி இசைத்தொகுப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். கொரோனா விவகாரத்தால் அந்த முயற்சி சாத்தியமாகவில்லை. நேரம் கிடைக்கும்போது மீண்டும் இசைத்துறையில் கவனம் செலுத்துவேன்.
“படங்களை இயக்கும் ஆர்வம் உண்டா என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். அதற்கான பதில் தெரியவில்லை. எனக்காக மட்டுமே யோசிக்கும் சுயநலம் என்னிடம் கிடையாது.
“சிறு வயது முதல் பல கதைகளை எழுதி இருக்கிறேன். ஆனால், ஒரு படத்துக்கான கதை என்று எதையும் இன்னும் எழுதி வைக்கவில்லை. நேரமின்மைதான் அதற்குக் காரணம். எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை,” என்று சொல்லும் நித்யா மேனனுக்கு, இயற்கையோடு நெருக்கமாக இருப்பதுதான் பிடித்தமான பொழுதுபோக்காம்.
வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதையும் இவர் பார்ப்பதில்லை. அன்றாட செய்திகளைக்கூட தெரிந்துகொள்வதில்லை.
“இத்தனைக்கும் செய்தியாளராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. பிறகு நடிகையாகிவிட்டேன். இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில் இருப்பதை பெரும் ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்,” என்கிறார் நித்யா மேனன்.

