தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனக்கு இந்தி தெரியாது: தனு‌‌ஷ்

2 mins read
6f574eea-0582-4835-8391-fefd28c83fe3
மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனு‌‌ஷ், ரா‌‌ஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா. - படம்: ஊடகம்

‘குபேரா’ திரைப்படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும், படம் தன்னுடைய ஏழ்மையான கடந்த காலத்திற்கு அழைத்துச்சென்றதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ராஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படம் உருவாகியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற தனுஷ் ‘ஓம் நம சிவாய, எல்லோருக்கும் வணக்கம்’ என தமிழிலேயே தொடங்கி “மன்னிக்கனும் எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலத்தில் பேசுவேன். ஆனால், அதுவும் அரைகுறையாகத்தான் பேசுவேன். பொறுத்துக்கொள்ளுங்கள்,” என பேசினார். ஆனால், அவருடைய பேச்சு அனல்பறக்கும் பேச்சாகப் படபடவென வெடித்துத் தள்ளியது.

படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து ஒரு குறிப்பாவது கொடுங்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த தனுஷ், “நான் ஒரு பிச்சைக்காரனாக நடிக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் நிறைய ஆராய்ச்சியும் அதைச் சரியாகக் கொண்டுவர பயிற்சியும் செய்தேன். வெயிலில் நிறைய கஷ்டப்பட்டேன். ஆனால், நான் சொன்ன இவை அனைத்தும் பொய். நான் எதுவும் இப்படிச் செய்யவில்லை,” என்று சொல்லிச் சிரித்தார்.

“மிக முக்கியமாக இதுபோன்ற ஒரு படத்திற்கு இப்படியான ஒரு விளம்பரம் தேவைப்படுகின்றது. இப்படம் அனைவரையும் போய்ச் சேரவேண்டும் என விரும்புகின்றோம். கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்றும் நம்புகின்றோம்.

“நான் உண்மையில் எதையும் செய்யவில்லை. நேராகப் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று இயக்குநர் சொன்னதை அப்படியே செய்தேன்.

“குபேரா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். என்னுடைய ஏழ்மையான கடந்த காலங்களுக்கு மீண்டும் என்னை அழைத்துச் சென்றது. நான் அடிக்கடி இப்படி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், ‘குபேரா’ இப்படி விளம்பரப்படுத்தப்படுவதற்கு தகுதியான திரைப்படம்.

“மேலும் குப்பைக்கிடங்கில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவம் குறித்து பேசிய தனுஷ், “படப்பிடிப்பின்போது நாங்கள் நிறைய சிரமப்பட்டோம் என செய்திகள் வந்தன. ஆனால், அப்படியில்லை. படப்பிடிப்பை நாங்கள் வேடிக்கையாக முடித்தோம்.

“ஒரு குப்பைக் கிடங்கில் நானும் - ராஷ்மிகாவும் கிட்டத்தட்ட 6 மணிநேரம் நடித்தோம். ரா‌‌ஷ்மிகா நன்றாகவே இருந்தார். எந்தவிதமான நாற்றமும் இல்லாமல் மணப்பதாகக் கூறினார்.

“ஆனால், ‘குபேரா’ உலகத்தின் மற்றொரு பக்கத்தை நெருங்கிப் பார்க்க உதவியது. என்னுடைய தொடக்கமும் அப்படியான ஓர் இடத்திலிருந்து ஆரம்பித்ததுதான். மீண்டும் என்னுடைய குழந்தைப் பருவத்தின் ஏழ்மையான சூழலுக்குக் ‘குபேரா’ அழைத்துச்சென்றது பலவற்றையும் ஞாபகப்படுத்தியது,” என்று பேசினார் தனு‌‌ஷ்.

இந்நிலையில் தனுஷ் இவ்வாறு படத்தைப் பற்றி மிக மிக உயர்வாகப் பேசி வருவதைப் பார்த்தால் கண்டிப்பாக இப்படம் ஒரு தரமான படைப்பாக இருக்கும் என்றே தெரிகின்றது.

பொதுவாக தனுஷ் தன் படங்களை இந்தளவிற்கு உயர்த்திப் பேசமாட்டார்.

இந்நிலையில் ஜூன் 20ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியிலும் இப்படம் வெளியாக இருக்கின்றது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்