அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள புதிய படத்திற்கு ‘அன்பில் அவன்’ எனப் பெயரிடப்பட்டு முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி, அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இதனைத் திறம்பட இயக்கியுள்ளார்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற இப்படத்தின் தலைப்புக்கான முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அசோக் செல்வன், “எனது படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமே கடைசியாக வந்தது,” எனத் தெரிவித்தார்.
மேலும், “என்ன சார் படமே நடிக்கிறது இல்லையா?” என்று முதலில் தன்னைப் பார்க்கிறவர்கள் கேட்பதாக அவர் கூறினார்.
அதன்பின்னர், நண்பர்களும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதே கேள்வியைத் தம்மிடம் தொடர்ந்து கேட்கத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்தில், கண்ணாடியைப் பார்த்து “எப்போடா படம் வரும்?” என்று தம்மையே கேட்க ஆரம்பித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், “ஒவ்வொரு படமும் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும்,” என்றும் நடிகர் அசோக் செல்வன் சுட்டிக்காட்டினார்.
மேலும், “ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை படம் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் படத்தின் எண்ணிக்கையை அதிகம் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் அனைத்து படங்களிலும் ஒப்பந்தமாகி நடிக்கக் கூடிய ஆள் நான் இல்லை,” என்றார்.
“ஒவ்வொரு படமும் புதிதாகப் பண்ண வேண்டும். புதிய முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆள் நான்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


