திரையுலகில் நடிப்பதை தனது கனவு, லட்சியம் என்றெல்லாம் சொல்ல முடியாது என்கிறார் நடிகை நித்யா மேனன்.
கடவுள் புண்ணியத்தில் நடிகை என்ற வேலை தமக்கு நல்லவிதமாக அமைந்துவிட்டதாகவும், அந்த வேலை ஒத்துப்போனதால் தொடர்ந்து திரையுலகில் நீடிப்பதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
நித்யா மேனன் என்று பெயர் வைத்திருப்பதால் தமக்கு சாதிப்பற்று எல்லாம் கிடையாது என்று சொல்பவர், பெயரில் சாதி இருந்தாலும் மனத்தளவில் அது இருக்கக்கூடாது என்பதே தமது கொள்கை என்கிறார்.
“எந்த மொழியில் நடித்தாலும் நானே பின்னணிக் குரல் கொடுப்பேன். மலையாளத்தில்தான் எனக்கு சற்று சிக்கல். என் உச்சரிப்பு சரியாக இல்லை என்பார்கள். வேறு ஒருவர்தான் எனக்குப் பின்னணிக் குரல் கொடுப்பார்.
“பெங்களூரில் பிறந்ததால் என்னை நான் மலையாளி என்றுகூட நினைத்தது கிடையாது. நான் ஏன் தமிழில் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியவர்களுடன் மட்டும் தொடர்ந்து நடிக்கிறேன் என்று கேட்கிறார்கள். அவர்களுடன் நடிப்பது சவாலானதாக இருக்கும். அதனால் வசதியாக உணர்கிறேன்.
“மேலும் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் நல்ல அனுபவமும் அமையும். திரையுலகில் எனக்கான மரியாதையைத் தக்க வைத்துக்கொள்வதில் எப்போதுமே முனைப்பாக இருப்பேன்.
“இயக்குநர் மிஷ்கின் படப்பிடிப்பின்போது வெளிப்படுத்தும் குணாதிசயம் எனக்கு கோபத்தை ஏற்படுத்தும். பல சமயங்களில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நானே கூறியிருக்கிறேன். அவரும் மன்னிப்பு கேட்டுள்ளார்,” என்று சொல்லும் நித்யா மேனன், வாய்ப்புகளுக்காக தன்மானத்தை இழந்துவிடக்கூடாது என்கிறார்.
இவர் சில படங்களில் நடிக்க மறுத்தபோது சம்பந்தப்பட்ட படக்குழுவினர் இவரை உருவக்கேலி செய்துள்ளனராம்.
தொடர்புடைய செய்திகள்
நித்யா குள்ளம், குண்டு என்றெல்லாம் பலவிதமாக கிண்டல் செய்து திருப்தி அடைந்திருக்கிறார்கள். நான் அது குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லை. பொதுவாக எந்த இடம், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் மனதில் இருப்பதை படப்படவென்று பேசிவிடுவேன். நான் எதை உண்மை என்று நினைக்கிறேனோ, அதற்கு உண்மையாக இருக்கிறேன். இதனால் எனக்கான வாய்ப்புகளைப் பறிகொடுத்தாலும், சினிமாவே என்னைக் கைவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.
“என்னைப் பொறுத்தவரை எந்த சூழ்நிலையிலும் பிறரின் தயவை நம்பி இருக்கக்கூடாது. இன்றுவரை என் துணிகளை நானேதான் துவைத்துக் கொள்கிறேன். என் தந்தை இதைப் பலமுறை பார்த்து ஆச்சரியபட்டிருக்கிறார். ஆனால், பிறரை நாடி இருப்பது எனக்குப் பிடிக்காது. அதனால்தான் இன்னும் திருமணம் செய்யவில்லை.
“உறவில் சிக்கிக்கொண்டு தவிப்பதைவிட தனி ஆளாக இருப்பதே நல்லது,” என்கிறார் நித்யா மேனன்.
அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வது பலருக்கு சலிப்பை ஏற்படுத்தும் என்றால், நித்யா அதற்கு நேர்மாறாக இருக்கிறார். நம்மை நாமே உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதும் இவரது கொள்கையாம்.
“விமான நிலையங்களில் காத்திருக்கும்போது அங்கு நம்முடன் அமர்ந்து இருப்பவர்களைத் தொடர்ந்து கவனிப்பது எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய முகபாவங்களைப் படிப்பது தனி சுவாரசியம். சோகம், மகிழ்ச்சி, விரக்தி, களைப்பு எனப் பலவிதமான முகங்களைப் பார்ப்பதும் அவற்றை மனத்தில் பதிய வைப்பதும் புத்தகத்தைப் படிப்பதைவிட இனிய அனுபவம்,” என்கிறார் நித்யா மேனன்.

