எனக்குத் தேவை பாராட்டு அல்ல, வேலை கொடுங்கள்: வடிவுக்கரசி

எனக்குத் தேவை பாராட்டு அல்ல, வேலை கொடுங்கள்: வடிவுக்கரசி

2 mins read
cc689737-2f55-43d2-894e-0bb37be1e3f2
‘கான் சிட்டி’ திரைப்படக் காட்சி. - படம்: விகடன்

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25வது நாள் வெற்றி விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மூத்த நடிகை வடிவுக்கரசி, திரைத்துறையில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்தும் தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருப்பது குறித்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

விழாவில் உணர்ச்சிபூர்வமாகப் பேசிய வடிவுக்கரசி, “கான் சிட்டி’ திரைப்படம் வெற்றி பெற்று 25வது நாளை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ‘அருணாச்சலம்’ படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் என் நடிப்பைப் பலரும் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

“ஆனால் ஒரு விஷயம், யூடியூபில் ‘வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்’ என்று பாராட்டும் விமர்சகர்கள், ‘இவருக்கு மேலும் வாய்ப்புகளும் வேலைகளும் கொடுங்கள்’ என்று ஏன் எழுதுவதில்லை?

“அந்தக்காலத்தில் நாளிதழ்களில் ‘இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று ஒரு வரி எழுதுவார்கள். அதைப் பார்த்துத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வாய்ப்பு தருவார்கள்.

“எனவே, எனக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் தரலாம் என்றும் எழுதுங்கள். அது எனக்கு வேலை கிடைக்க உதவியாக இருக்கும்,” என்று கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இப்படத்தில் நடித்த யோகி பாபு, அர்ஜுன் தாஸ் என அனைவரும் அடுத்தடுத்த படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்கள்.

“ஆனால், ‘அம்மா நீங்கள் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள்’ என்று பலரும் சொல்கிறார்களே தவிர, தற்போது என் கையில் ஒரு படம் கூட இல்லை. நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு யூடியூப் எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன்.

“எனக்குத் தேவை பாராட்டு அல்ல, வேலைதான். திரைப்படங்களில் முழுமையாக நடித்துவிட்டால், ‘அடுத்து சில நாள்களுக்குக் கூட வேலை தரமுடியாது’ என்கிறார்கள்.

“இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் தன் அடுத்தடுத்த படங்களில் எனக்குக் குறைந்தபட்சம் ஒரு நாள் வேலையாவது தருவேன் என்று வாக்குறுதி அளித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

“என் நடிப்பு நன்றாக இருக்கிறது என்று உங்கள் மனசாட்சிக்குத் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள்,” என நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்