தாம் யாரையும் இதுவரை சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்ததில்லை என்று கூறியுள்ளார் இயக்குநர் சேரன்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நினைப்பதால்தான் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்கள் இருப்பதில்லை என்றும் சேலத்தில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தாம் வில்லன்களை விரும்புவதில்லை வில்லனாகவும் இருப்பதில்லை என்றார் அவர்.
“இதேபோல் இருந்தால் உங்கள் வாழ்க்கையும் அழகாக இருக்கும். எனக்கும் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. கடன் நிறைய இருக்கிறது. படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை.
“கதை சொல்லச் சென்றால் கதாநாயகர்கள் கதை கேட்க மறுக்கிறார்கள். இவற்றைக் கடந்து என்னால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம்தான் இருக்கிறது என நம்புவதுதான்.
“எல்லோரையும் நேசியுங்கள். எல்லாம் சரியாகிவிடும்,” என்றார் சேரன்.

