மருத்துவத் துறையிலும் சாதிக்க ஆசை: பாடினி குமார்

3 mins read
7557a294-609e-48bc-98e1-a04370ade5c2
பாடினி குமார். - படம்: ஊடகம்

சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள்.

அந்தப் பட்டியலில், பாடினி குமார் என்பவரை சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

தற்போது நட்டி நடராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘சீசா’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பாடினி.

மருத்துவத்துறையில் இருந்து திரையுலகுக்கு வந்த கதாநாயகிகளில் இவரும் ஒருவர். அடிப்படையில் இவர் இருதய சிகிச்சை நிபுணர்.

‘பாடினி’ என்றால் தமிழ்ப் புலவி என அர்த்தமாம். ‘காக்கை பாடினியார்’ என்று சங்க காலத்தில் பெண்பால் புலவர் ஒருவர் இருந்தார். ஒட்டக்கூத்தனார், ஔவையார் காலங்களில் அந்தப்பெயர் பரவலாக அறியப்பட்டது.

“தமிழகத்தில் பிரபலமான தமிழ் ஆர்வலர்களில் ஒருவரான அருணாச்சலம் தலைமையில், 18 தமிழ் அறிஞர்கள் சேர்ந்து எனக்குப் பெயர் சூட்டினர்.

“இப்படிப்பட்ட தனித்துவமான ஒரு பெயரை எனக்குச் சூட்ட வேண்டும் என்பதுதான் என் பெற்றோரின் விருப்பம். மேலும், நாங்கள் சாதி மதம் என எந்தவிதப் பாகுபாடும் பார்ப்பது கிடையாது. விவரம் தெரிந்த பிறகு அப்பாவின் பெயரையும் இணைத்துக்கொண்டேன்,” என்கிறார் பாடினி குமார்.

அடிப்படையில் இதய சிகிச்சை நிபுணரான இவருக்கு, சிறு வயது முதலே நடிகை ஆக வேண்டுமென்ற விருப்பம் இருந்ததாம். பின்னர் ‘ஏரோ ஸ்பேஸ்’ பொறியாளராக உருவாக வேண்டுமென்றும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையில் மருத்துவம் படிக்க முடிவு செய்தாராம்.

“சினிமா மீதான ஆர்வம் காரணமாக வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினேன். ஆனால் நான் நினைத்ததுபோல் எதுவும் எளிதில் அமையவில்லை. சில கசப்பான அனுபவங்கள், சிரமங்களுக்குப் பிறகே திரைத்துறைக்குள் வர முடிந்தது.

“எனது முதல் கேமரா அனுபவம் என்றால், ஒளிப்பதிவாளர் பாலு தயாரித்த ‘திருமணம்’ என்ற சின்னத்திரை தொடர். கதாநாயகியாக நடித்த படம் ‘டேக் டைவர்ஷன்’.

“அதன் பிறகு சில நிறுவனங்கள் நடத்திய நடிப்புத் தேர்வில் கலந்து கொண்டபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை,” என்று சொல்லும் பாடினி, வாய்ப்புகள் இல்லாதபோது நேரத்தை வீண்டிக்காமல் நடிப்புப் பயிற்சி பெற்றாராம்.

மேலும், தான் நடித்த காட்சிகளைக் கொண்ட சிறு, குறு காணொளிகளை தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அவற்றைப் பார்த்த பிறகே ‘சீசா’ பட இயக்குநர் குணா சுப்பிரமணியம் நாயகியாக நடிக்க வாய்ப்பு தந்தாராம்.

“முதல் படத்தில் குறும்புகள் அதிகம் செய்யும் இளம் பெண்ணாக நடித்தேன். ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக ‘சீசா’ படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கணவனைப் பார்த்துக்கொள்ளும் முதிர்ச்சியான பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“பெரிய ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கிய நட்டி நடராஜுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த நிஷாந்த் ரூஷோவும் பழக இனிமையானவர்,” என்று சொல்லும் பாடினி, அடுத்து ‘ஹார்ட் பீட்’, ‘வேற மாதிரி ஆபிஸ்’ என இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தாகி உள்ளார்.

இவரது தந்தையும் தீவிர சினிமா ரசிகராம். அதனால்தான், ஒரு நடிகை ஆக தனக்கு தந்தையின் ஆதரவு கிடைத்ததாகச் சொல்கிறார்.

“அப்பாவின் விருப்பம்போல் நல்ல நடிகை எனப் பெயர் வாங்குவதுதான் எனது லட்சியம். அதேசமயம் நான் படித்த படிப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாக மருத்துவத் துறையிலும் நல்ல பெயர் எடுக்க விரும்புகிறேன்.

“சமூக ஊடகங்கள் மூலம் நம் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. எனவேதான் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குகிறேன்.

“நான் பதிவிடும் காணொளிகளைப் பல லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்பதால் சமூகப் பொறுப்போடு அவசியமான தகவல்களை மட்டுமே பகிர்கிறேன்.

“மருத்துவம், சினிமா சார்ந்த காணொளிகள் அதிகமாக பகிர்ந்திருந்தாலும், பெண்கள் கடினமான உழைப்பாளிகள் என்பதை வலியுறுத்தும் காணொளிகளையும் பகிரத் தவறியதில்லை.

“ஒரு துறையை மட்டும் சார்ந்திருக்காமல் மற்ற துறைகளிலும் எங்களால் இயங்க முடியும் என்பதை என் மூலம் கற்றுக்கொண்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர்.

“மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் அளவுக்கு நான் இன்னும் பெரிதாக சாதிக்கவில்லை, எனினும் இதுபோன்ற சில வார்த்தைகளைக் கேட்கும்போது புது உத்வேகம் ஏற்படுவதுடன் மனமும் மகிழ்ச்சியில் நிறைகிறது,” என்கிறார் பாடினி குமார்.

குறிப்புச் சொற்கள்