‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டுக்காகச் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர், அப்படத்தின் விளம்பரப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அப்படம் சிவகார்த்திகேயனை நிச்சயம் அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘ஃபேன்லி’ எனும் பொழுதுபோக்குச் செயலி அறிமுக விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிவா, தமது ரசிகர்கள் பற்றி பேசினார்.
வணங்கும் ரசிகரைவிட தம்மை குடும்பத்தில் ஒருவனாகவும் நண்பராகவும் பார்க்கும் ரசிகர்கள் வேண்டும் என்றார் அவர்.
மேலும், அவர்கள் கடவுளையும் பெற்றோரையும் மட்டும் வழிபட்டால் போதும் எனக் கூறிய அவர், தானும் ரசிர்களைத் தன் குடும்பமாகத் தான் கருதுவதாகவும் சொன்னார்.
ரசிகர்கள் குறித்து சிவா பேசியது தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அவருடைய இந்தக் கருத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்நிகழ்ச்சியில் சமூக ஊடகங்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“சமூக ஊடகத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் பயமாக இருக்கிறது. அனைத்து சமூக ஊடகங்களிலும் எனது பெயரில் கணக்கு ஒன்று உள்ளது. அதை வேறொருவர் நிர்வாகித்து வருகிறார்.
“இன்ஸ்டகிராமை மட்டும் பயன்படுத்தி வந்தேன். அதிலும் தவறான கருத்துகள் வலம்வருவதால் தற்போது அந்தப் பக்கமும் போவதில்லை. எதிர்மறை கருத்துகள்தான் மக்களிடம் விரைவில் சென்றடைவதால், அதைத் தான் விளம்பரம் செய்கின்றனர். பொய்யான தகவலைப் பகிர்ந்தாவது பிரபலப்படுத்திக்கொள்வோம் எனப் பலர் நினைக்கின்றனர்,” எனச் சிவா கூறினார்.
மேலும், அறிவு சற்று குறைவாக இருப்பதால் தான் நடிக்க முடிகிறது எனப் பேசிய அவர், சற்று சிந்தித்தேன் என்றால் இயக்குநரைக் கொடுமைப்படுத்த ஆரம்பத்திருப்பேன் என வேடிக்கையாகச் சொன்னார்.
இதற்கிடையே, ‘பராசக்தி’ பட வேலைகளை முடித்துக்கொண்டு அடுத்ததாக ‘எஸ்கே24 ‘படத்தின் படப்பிடிப்பில் சிவா கவனம் செலுத்தவுள்ளார். சிபி சக்கரவர்த்தி அப்படத்தை இயக்குகிறார்.
அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் அதிகச் செலவில் எடுக்கப்படும் படம் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘எஸ்கே26’ என பெயரிடப்பட்ட அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இவ்விரு படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
‘எஸ்கே24’ படத்தைச் சிவா தயாரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘அமரன்’, ‘மதராஸி’ என அடுத்தடுத்து இரு வெற்றிப் படங்களைத் தந்த அவர், ‘பராசக்தி’ மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்குகிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புரட்சிகரமான படமாக அப்படம் தயாராகி வருகிறது.

