அப்பா சொன்னதைக் கடைப்பிடிக்கிறேன்: சண்முக பாண்டியன்

அப்பா சொன்னதைக் கடைப்பிடிக்கிறேன்: சண்முக பாண்டியன்

1 of 2
படம்: விகடன்
படம்: விகடன்

26 Sep 2026 - 3:48 pm

2 mins read

‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களை அடுத்து ஏற்பட்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் தீவிரமாகத் திரைத்துறையில் களமிறங்கி உள்ளார் காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.

அண்மையில் அளித்த பேட்டியில், தனது அடுத்தகட்டத் திட்டங்கள், குடும்பம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடியுடன் முரட்டுத்தனமான தோற்றத்தில் வலம்வந்த சண்முக பாண்டியன், தற்போது ‘வாணவேடிக்கை’ படத்திற்காக முற்றிலும் உருமாறி, கல்லூரி மாணவர் போன்ற புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு குடும்பக் கதைக்களத்தைக் கொண்டது. அப்பா-மகனுக்கு இடையிலான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், சண்முக பாண்டியன் பட்டாசுக் கடையில் பணிபுரிபவராக நடிக்கிறார். அவரது இணையாக ஷிவானி ராஜசேகர் நடிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

“அப்பா எனக்கு நடிப்பைப் பற்றிப் பெரிதாக அறிவுரை எதுவும் கூறியதில்லை. ஆனால், நேரத்தைக் கடைப்பிடிப்பதை மிகவும் வலியுறுத்துவார். காலை ஆறு மணிக்குப் படப்பிடிப்பு தொடங்கும் எனில், 5.30 மணிக்கே ஒப்பனையுடன் தயாராக இருக்க வேண்டும், தயாரிப்பாளருக்கு எந்தச் சிரமமும் தரக்கூடாது என்று கூறுவார். அதை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன்,” என்று கூறியுள்ளார் சண்முக பாண்டியன்.

சசிகுமார் இயக்கத்தில் உருவாகவிருந்த ‘குற்றப்பரம்பரை’ திரைப்படத்திற்காகவே ஒன்றரை ஆண்டுகள் தாடி, முடியை வளர்த்துக் காத்திருந்ததாகத் தெரிவித்த அவர், அதன் படப்பிடிப்பு நடப்பதில் சில சிக்கல்கள் எழுந்ததால், ‘படை தலைவன்’ படத்தில் அந்த தோற்றத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

‘குற்றப்பரம்பரை’ படம் எப்போது தொடங்கும் என்பதைச் சசிகுமார்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்தே அம்மா (பிரேமலதா) கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தத் தொடங்கிவிட்டார். வெளியில் இருப்பவர்களுக்கு இது புதிதாகத் தெரியலாம். ஆனால், அவர் எப்போதும் ஓர் ‘இரும்புப் பெண்மணி’தான். வீடு, கட்சி எதுவாக இருந்தாலும் அழகாக வழிநடத்துகிறார்.

“தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்திலான புதிய படம் உட்பட மூன்று புதுப்படங்கள் குறித்துp பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,” என்று சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விஜயகாந்த்நடிகர்திரைப்படம்இயக்குநர்