தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போராடி வென்றேன்: சிவகார்த்திகேயன்

2 mins read
4fb7d0ba-91a4-4a7b-98bc-3ff69dc47afe
தமது மனைவி ஆர்த்தியுடன் எஸ்கே. - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி, உலகளவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.170 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் திரையரங்குகளுக்கு சென்று இந்தப் படத்தை பார்த்திருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இதுவும் ஒரு குறிப்பிட்ட சாதனையாகும்.

இந்நிலையில், `ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு பேட்டியளித்த எஸ்கே என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் மனந்திறந்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

“நான் எப்போதும் சினிமா துறை குறித்து புகார் சொல்லமாட்டேன். நான் சினிமா துறையில் இருக்க வேண்டும். ஆனால், என்னுடைய அழுத்தம் என் குடும்பத்தைப் பாதிக்கக் கூடாது.

“அவர்கள் அனைவரும் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் எனக்காக நீங்கள் பொறுத்துக் கொண்டது போதும், சினிமாவைவிட்டு விலகுகிறேன் என என் குடும்பத்திடம் கூறினேன்.

“அந்த சமயத்தில் என்னுடைய மனைவி ‘எதுவுமில்லாமல் தொடங்கி இன்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். அஜித், விக்ரமுக்குப் பிறகு வெளியாட்கள் சினிமாவில் பெரியதாக வரவில்லை. நீங்கள் அந்த சாதனையைச் செய்திருக்கிறீர்கள். அது சுலபமானது அல்ல. எங்களுக்கு மற்ற விஷயங்களெல்லாம் பிரச்சினை இல்லை. நீங்கள் அது குறித்து கவலை கொள்ளாதீர்கள்,’ என்றார்.

“கடைசி ஐந்தாண்டுகள் எனக்கு மிகவும் கடின காலமாக அமைந்தன. சம்பளம் போன்றவற்றை சிந்திக்காமல் நம் வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும். ஒரு படம் தோல்வியானால் அதனை சரிப்படுத்திக் கொண்டு மீண்டெழுந்து அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும். நான் இந்த வழியைத்தான் பின்பற்றினேன்.

“சாதாரண ஒருவன் பெரிய வளர்ச்சியை எட்டும்போது இங்கு சிலர்தான் வரவேற்கிறார்கள். ஒரு சராசரி மனிதனாக இருந்து சினிமாவில் நான் சாதிப்பதை சிலர் ஆதரிக்கிறார்கள். ஆனால் இன்னும் சிலர் அதை வெறுக்கிறார்கள்.

“உனக்கு எல்லாம் சினிமாவில் இருக்க என்ன தகுதி இருக்கு என என் முகத்துக்கு நேராகவே கேட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்து விடுவேன்.

“அதேபோல் சமூக வலைத் தளங்களில் சிலர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். என் படம் தோல்வியடைந்தால் என்னை மட்டும் குறை சொல்வார்கள். வெற்றியடைந்தால் என்னைத் தவிர்த்து விட்டு மற்றவர்களை காரணமாகச் சொல்வார்கள்.

“சிலர் நான் ஒரே நாளில் ஜெயித்து விட்டது போல் பேசுவார்கள். ஆனால் உண்மை அது அல்ல. பல ஆண்டுகள் தொலைக்காட்சியில் வேலை செய்து, போராடித்தான் சினிமாவுக்கு வந்தேன்.

“சொல்லப்போனால், என்னுடைய வெற்றி என்னை எதிர்ப்பவர்களுக்கான பதில் என்றுகூட நான் சொல்லமாட்டேன். என்னுடைய வெற்றி அதற்கானது அல்ல,” என்றார் சிவகார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்