அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிங்ஸ்டன்’.
நாயகியாக திவ்யபாரதியும் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா பிப்ரவரி 27ஆம் தேதி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத், மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுடன் தாம் ஏற்கெனவே ‘பேச்சுலர்’ படத்தில் நடித்ததாகவும் அதன் பிறகு மூன்று படங்களில் நடித்திருந்தும் அவை எதுவுமே வெளியாகவில்லை என்றும் கூறினார்.
“மீண்டும் ஜி.வி.யுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் விதி என்று நினைக்கிறேன்,” என்றார் திவ்யபாரதி.
தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன் என்று குறிப்பிட்ட அவர், இந்த விழாவிற்கு வந்ததற்காக அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
“சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் என்னை இந்தப் படத்தில் சண்டையெல்லாம் போட வைத்துள்ளார். கடலில் நடக்கும் சாகசக் காட்சிகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற காட்சிகளில் துணிச்சலுடன் நடித்தேன்.
“எந்தச் சூழ்நிலையிலும் எனக்குத் துணையாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி,” என்றார் திவ்யபாரதி.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்துப் பேசிய ஜி.வி.பிரகாஷ், ‘கிங்ஸ்டன்’ படம் இந்திய அளவில் பேசப்படும் படைப்பாக இருக்கும் என்றார்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் இவர், இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ என்ற இவரது புது நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.
“வெற்றிமாறன் என்னுடைய அம்மா மாதிரி. நடிக்க வேண்டும் படம் தயாரிக்க வேண்டும் என்று நான் பலவற்றைச் சொல்லும்போது, ‘உங்களுக்கு எதற்கு அந்த வேலை எல்லாம்?’ என்று அறிவுரை கூறி, அவற்றில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரிப்பார்.
“அதேசமயம், நாம் ஒரு முயற்சியில் ஈடுபட்டுவிட்டால், முழுமையாகத் துணை நின்று வழிநடத்துவார். என்னுடைய அம்மாவும் அப்படித்தான்,” என்றார் ஜி.வி.பிரகாஷ்.
தானும் வெற்றிமாறனும் கடந்த 18 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் வேலை தொடங்கிவிட்ட தகவலையும் தெரிவித்தார்.
“நான் தயாரித்துள்ள முதல் படம், நம்ம ஊர் ‘ஹாரிபாட்டர்’, ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ போல் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழிலும் ஏன் அதுபோன்ற படைப்புகள் வரக்கூடாது எனப் பலமுறை யோசித்திருக்கிறேன்.
“உள்நாட்டைச் சேர்ந்த இளையர்கள்தான் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி உள்ளனர். அக்காட்சிகள் ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும்.
“தமிழ், இந்தியப் படைப்புகளைப் பார்த்து, ஹாலிவுட் திரையுலகத்தினர் வியக்க வேண்டும். இதைச் சாதிக்கும் நோக்கத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறோம். எனவே ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார் ஜி.வி.பிரகாஷ்.