தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையராஜாவைப் பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரகுமான் பெருமிதம்

1 mins read
b20c8858-11ab-40c6-a980-c6ca3fe87c2a
இளையராஜாவுக்கு வாழ்த்துக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  - படம்: இந்திய ஊடகம்

அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு வாழ்த்துக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனிப் பெருமை தேடித் தந்தவர் இசைஞானி. இமாலயச் சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரியச் சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை ஆகியவற்றுக்கு இடையே நிலவிய வேறுபாடுகளைத் தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்,” என்றார் ரகுமான்.

“இளையராஜாவைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று ரகுமான் குறிப்பிட்டார்.

1976ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்