‘நீலாம்பரி’யாக நான் நடிக்க வேண்டியது: மனம் திறந்த மீனா

‘நீலாம்பரி’யாக நான் நடிக்க வேண்டியது: மனம் திறந்த மீனா

2 mins read
ea230956-3bfc-4214-b3d7-fc6dff48fa20
பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார் மீனா. - படம்: இந்து தமிழ் திசை

நடிகர் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது ‘தேவர் மகன்’. அதேபோல், ரஜினிகாந்த்தின் திரைப் பயணத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றாக ‘படையப்பா’ உள்ளது.

இந்த இரு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது தனக்கு வருத்தமாக இருந்தாலும் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டேன் என மீனா கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த போது பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார் மீனா.

அந்த வகையில், கமல்ஹாசனுடன் ‘அவ்வை சண்முகி’, ரஜினியுடன் ‘முத்து’, ‘வீரா’, ‘எஜமான்’ எனப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார்.

இதனிடையே, கடந்த 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நாயகனாக நடித்திருந்த ‘தேவர் மகன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மீனாதான்.

அந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு நாயகியாக கௌதமி, ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். அதில் ரேவதி நடித்த ‘பஞ்சவர்ணம்’ கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது.

‘பஞ்சவர்ணம்’ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனாதான். ஆனால், அவருக்குக் கிராமத்துப் பெண் வேடம் சரியாக அமையவில்லை. இளமையாக இருப்பதாகக் கூறி, ரேவதியைத் தேர்வு செய்தது படக்குழு.

அதேபோல், 1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்து நடித்த படம் ‘படையப்பா’.

அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

‘நீலாம்பரி’ வேடத்தில் நடிக்க மீனா படக்குழுவினருக்கு நெருக்குதல் கொடுத்தார். ஆனால் படக்குழுவினர் அதை மறுத்தனர். கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் அதை மீனா மறுத்துவிட்டார்.

“நினைத்தது நடக்கவில்லை என்றால் அதையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட வேண்டும். ‘தேவர் மகன்’, ‘படையப்பா’ வாய்ப்பு தவறினாலும் அர்ஜுனுடன் நடித்த ‘ரிதம்’ படம் எனக்குப் பெரிய அதிர்‌ஷ்டம்தான், அது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது,” என்றார் மீனா.

குறிப்புச் சொற்கள்