நித்யாவுடன் நடிக்க நீண்டநாளாகக் காத்திருந்தேன்: விஜய் சேதுபதி

3 mins read
9e7d37b9-f016-427b-8609-0fcb5e02f09e
 ‘தலைவன் தலைவி’ படக் காட்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மலையாள மொழியில் தயாரான 19(1)(ஏ) என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தபோது நித்யா மேனனுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதற்காக நீண்ட நாளாகக் காத்திருந்தேன். இப்போதுதான் அந்த ஆசை நிறைவேறி உள்ளது எனக் கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

“நித்யா நடித்த எந்தக் கதாபாத்திரத்திலும் அவரைத் தவிர வேறொருவரை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஏதோ வந்தோம், நடித்தோம் என இல்லாமல் படத்துக்கான அனைத்துத் தேவைகளையும் புரிந்துகொண்டு நடிக்கக்கூடிய சிறந்த கலைஞர்,” என அவர் பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதியின் 52வது படமாக தயாராகி உள்ள ‘தலைவன் தலைவி’ இம்மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

“இந்தப் படத்தை பார்த்து எல்லோரும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்கிறார் விஜய் சேதுபதி.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது பேசிய விஜய் சேதுபதி, “ஒரு 500 கி.மீ பயணம் செய்தோம் எனில் நமது பயணத்தின் ஒவ்வொரு கி.மீட்டரும் நமக்கு நினைவில் இருக்காது.

“ஆனால், ஒரு சில இடங்களில் இளைப்பாறிய தருணங்கள் மட்டும் அப்படியே நினைவில் இருக்கும். அதை நினைத்துப்பார்த்தால் மீண்டும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள ஆவல் பிறக்கும். அப்படித்தான் இயக்குநர் பாண்டிராஜுடன் பணியாற்றிய அனுபவமும் மனதில் நிலைத்துள்ளது.

“இந்தப் படத்தில் நடித்துள்ள குழந்தை மகிழ் எங்களை ஆசிர்வதிக்க வந்த தெய்வம் போன்றது. ஒத்திகைத் தாளில் இவ்வளவு எழுதி வைத்துள்ளனரே, எப்படி ஒரு வயது குழந்தை நடிக்கும் என நினைத்தோம். ஆனால், மிகவும் அழகாக நடித்தது அந்தக் குழந்தைதான்,” என்றார்.

குடும்பத்துக்குள் நடக்கும் கதை

‘தலைவன் தலைவி’ சொல்லாடல் சங்க இலக்கியங்களிலிருந்து தொடர்ந்துள்ளது. குடும்பத்துக்குள் நடக்கும் ஓர் அழகான கதையை படம் விவரிக்கும். அவரவர் குடும்பக் கதையும் கண்டிப்பாக இந்தப் படத்துக்குள் தெரியும்.

‘எங்கள் குடும்பக் கதையைத் திருடி விட்டீர்கள் பாண்டிராஜ்’ என்று நிறைய பேர் சொல்லக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்கிறார் பாண்டிராஜ்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார். எல்லாருக்கும் பரோட்டா போட்டுக் கொடுத்து அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார். படப்பிடிப்பிலும் அது தொடர்ந்தது.

பரோட்டா மட்டும் கிடையாது. சிக்கன் ஃப்ரை, மட்டன் ஃப்ரை, அரை வேக்காடு முட்டை, முட்டை மாஸ், சாக்லேட் பரோட்டா, இளநீர் பரோட்டா, தர்பூசணி பரோட்டா என புதிது புதிதாக விதவிதமான உணவுகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டார்.

இந்தக் கதையை எழுதும்போதே ‘நீ பாதி நான் பாதி’ என்பதுபோல் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருக்கும் 50 - 50% என சரி விகிதத்தில் வாய்ப்புகள் இருக்கும்படி எழுதினேன்.

விஜய் சேதுபதி ஆகாசவீரனாக இருக்கும்போது, நித்யா மேனன் பேரரசியாக இருந்தால் தான் கதை நன்றாகயிருக்கும் எனத் தோன்றியது. படத்தில் காதல் காட்சிகள், கணவன்- மனைவிக்கிடையே விவாதங்கள் நெறிதுளி பறக்கும்.

குழந்தைக்கு அம்மாவாக, மருமகளாக, நாத்தனாராக எல்லா இடத்திலும் தனது பாத்திரத்தை நிலைநிறுத்த வேண்டும். அதே சமயம் எல்லாருக்கும் பிடித்தவராகவும் இருக்கவேண்டும். இந்தச் சவால்களை எல்லாம் நித்யா சமாளித்துள்ளார்.

யோகிபாபுவுக்கு படம் முழுக்க வருவது போன்ற பாத்திரம். நகைச்சுவைக்கும் மேல் குணச்சித்திர நடிகராகவும் இருப்பாரெனக் கூறியுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

இதுவரை நான் நடிக்காத பாத்திரத்தில் நடித்துள்ளேன்: ரோஷினி

சென்னையில் நடைபெற்ற ‘தலைவன் தலைவி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ரோஷினி, “தலைவன் தலைவி’ படத்தில் இதுவரை நான் நடிக்காத பாத்திரத்தில் நடித்துள்ளேன்.

“ராகவர்தினி என்ற பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்துள்ளேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்