பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ்த் திரையுலகில் இயக்குநராகத் தடம் பதித்துள்ளார் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.
‘சிக்மா’ திரைப்படம் உலக அளவில் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், சக்தி ஃபிலிம்ஸ் விநியோகத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள், திரைத்துறையினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
திரைக்களத்தில் அறிமுக இயக்குநராகக் களம்கண்டுள்ள ஜேசன் சஞ்சய், “சினிமா எனும் பிரம்மாண்டமான திறமைக் கடலில், ஒரு புதிய இயக்குநராக எனது பயணத்தைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவே தனது படைப்பிற்கு மிகப்பெரிய பலம் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதிரடி திகில் கதையாக உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடிக்க, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் இணைந்துள்ளனர்.
500 கோடி ரூபாய் மதிப்பிலான, குற்றப்பின்னணியை மையமாகக் கொண்ட, விறுவிறுப்பான திரைக்கதையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலும் படம் வலுவான கூட்டணியைக் கொண்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தின் காட்சி அமைப்புகளும் படத்தொகுப்பாளர் பிரவீனின் சுவாரசியமான படத்தொகுப்பும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன.
இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகப் படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
தனித்துவமான அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைய வேண்டும் என்ற நோக்கில், தந்தையின் பின்னணியைச் சாராமல் தன் சொந்த உழைப்பையே முன்னிறுத்திச் செயலாற்றி உள்ளதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
‘சிக்மா’ திரைப்படம் அனைத்துத்தரப்பு மக்களையும் ஈர்க்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படமாக இருக்கும் என்பதால், திரையரங்குகளில் இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
