சென்னையின் தீவிர ரசிகையாகி விட்டேன்: ருஹானி

2 mins read
cf223df7-8a12-4111-9e8c-03ec389f8ad9
ருஹானி ஷர்மா. - படம்: ஊடகம்
multi-img1 of 3

’மாஸ்க்’ படத்தின் கதாநாயகி ருஹானி ஷர்மா இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவராம். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்.

தொடக்கத்தில் உள்ளூர் மொழிகளில்தான் நடிக்கத் தொடங்கியுள்ளார். திடீரென பிரபல தெலுங்கு நாயகன் நானி தயாரித்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

அந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றிபெற்று நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. அதன் பலனாக தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் ருஹானி.

’மாஸ்க்’ படத்துக்கு முன்பாகவே ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளாராம் ருஹானா. ஒர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘மாஸ்க்’ படக்குழுவுடன் பயணம் மேற்கொண்டது மிக அற்புதமான அனுபவம். ஆண்ட்ரியா, கவின் போன்ற அனுபவசாலிகளுடன் திரையைப் பகிர்ந்துகொண்டேன். அவர்கள் அனைவருமே கடினமாக உழைக்கிறார்கள்.

“பல நுணுக்கங்களையும் உழைப்பையும் கற்றுக்கொண்ட வகையில் இது எனக்கு முக்கியமான படம்,” என்று நேர்காணலில் கூறியுள்ளார் ருஹானா.

இந்தப் படத்தின் இயக்கம், தயாரிப்புப் பணிகளை மேற்பார்வை செய்துள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறனின் வழிகாட்டுதல் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது என்கிறார் ருஹானா.

“ஒரு நடிகையாக வெற்றிமாறனிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவர் சினிமா எனும் கலைக்குத் தன்னை நேர்மையாக அர்ப்பணித்துப் பணியாற்றுகிறார்.

“அவரது ஒவ்வொரு அணுகுமுறையும் வியப்பைத் தருகிறது. சினிமாவை உண்மையாக நேசிக்கக்கூடிய ஒருவரால்தான் இதுபோன்று இயங்க முடியும். அவர் தமிழ்ச் சினிமாவின் தனித்துவமான ஆளுமை,” எனப் பாராட்டித் தீர்க்கிறார் ருஹானி ஷர்மா.

தற்போது துல்கர் சல்மான் படம் உட்பட இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறதாம். அடுத்து நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று மிக வித்தியாசமாக இருக்கும் என்று தம்மால் இப்போதே உறுதியளிக்க முடியும் என்கிறார்.

“தமிழ் எனக்குப் புதிது. மொழியைப் புரிந்துகொள்ள தொடக்கத்தில் சிரமப்பட்டேன். எனினும், போகப்போக பழகிவிட்டது. மற்றபடி அனைத்து மொழிகளிலும் நல்ல கதைகள், படைப்புகள் உருவாகின்றன. எனவே அனைத்து மொழிகளிலும் நடிப்பதை விரும்புகிறேன்.

“வட இந்தியாவில் பிறந்து, தென்னிந்தியாவில் வசிக்கும் பெண் என்பதால் சில அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடுகிறது. தென்னிந்தியப் பகுதிகளில் வெப்பம் அதிகம். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வசிப்பது சுவாரசியமான அனுபவம் எனலாம். நான் சென்னையின் தீவிர ரசிகையாகிவிட்டேன். அங்குள்ள கபாலீசுவரர் கோவில் மனத்துக்கு நெருக்கமான இடமாக மாறிவிட்டது. சென்னைக்குச் செல்லும்போதெல்லாம் மறக்காமல் கபாலீசுவரர் கோவிலுக்குச் சென்று வழிபடுவேன்.

“சென்னையில் உள்ள சாலையோரக் கடைகளில் இட்லி, சாம்பார் சாப்பிடப் பிடிக்கும். அதேபோல் சாலையோரங்களில் விற்கப்படும் காலணிகள், வளையல்களை வாங்கிக் குவிப்பேன்.

“இயக்குநர்கள் மணிரத்னம், பிரேம்குமார், வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்க விரும்புகிறேன்,” என்கிறார் ருஹானி ஷர்மா.

குறிப்புச் சொற்கள்