தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிலும் கனடாவிலும் உருவக்கேலிக்கு ஆளானேன்: ஜொனிதா காந்தி

2 mins read
ffa200d8-7a26-4f3e-8ac2-2357b03bed9b
ஜொனிதா காந்தி. - படம்: ஊடகம்

ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியில் தவறாமல் இடம்பெறும் ‘சிவாஜி’ படத்தில் ஒலித்த ‘அதிரடித்தான் மச்சானே’ பாடல்.

சில ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றைப் பெற்றது.

இந்தப் பாடலின் மூலம் கவனம் ஈர்த்தவர் பாடகி ஜொனிதா காந்தி.

தமிழ், உருது, தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். நேரம் அமையும்போது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மொழிகளையும் விட்டுவைப்பதில்லை.

இந்நிலையில், அண்மை காலமாக சமூக ஊடகங்களில் பெண்களுக்கு நிறைய பாலியல் தொல்லைகள் நடந்து வருவதாகக் குரலெழுப்பி உள்ளார் ஜொனிதா காந்தி.

“நான் இன்ஸ்டகிராமில் கொஞ்சம் ஈடுபாட்டுடன் இருப்பேன். தினமும் எனக்கு அதில் ஏதாவது தகவல்கள் வந்த வண்ணமிருக்கும். அவற்றையெல்லாம் பெரிதாகப் பார்க்க மாட்டேன்.

“ஆனால், இன்ஸ்டகிராமில் எனக்கு நண்பர்களாக இருப்பவர்கள் சிலர் என்னைப் பற்றி சில பதிவுகளில் குறிப்பிடுவார்கள். அதைப் பார்த்தால் அவ்வளவு ஆபாசமாக இருக்கும். இப்படிப் பலவிதமாகப் பாலியல் தொல்லைகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து நடக்கிறது,” என்கிறார் ஜொனிதா காந்தி.

பஞ்சாப் குடும்பத்தில் பிறந்த இவர், கனடாவில் வளர்ந்து அங்குதான் கல்வி பயின்றாராம். இப்போது இந்திய அளவில் முன்னணிப் பாடகியாக உருவாகி உள்ளார்.

கனடாவில் இருந்தபோது இனப்பாகுபாடு தொல்லைகளையும் எதிர்கொண்டதாகத் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“கனடாவில் என் முடி, முகம் என தோற்றத்தை வைத்தும் என்னைப் பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள். நான் பார்ப்பதற்கு காட்ஸில்லாவைப் போல் இருப்பதாக நையாண்டி செய்வார்கள்.

“பஞ்சாப்பில்கூட இதேபோல் உருவக்கேலிக்கு ஆளானதுண்டு. அதனால் என் தோற்றம் குறித்து நானே தாழ்வாக நினைத்துக் கொள்வேன். இப்போதும்கூட அதே தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது ஏற்படும்.

“ஆனால் நம்மை நாம் நேசித்தால்தான், பிறர் நம்மை நேசிப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று தமது சமூக ஊடகப் பதிவில்,” மேலும் விரிவாகக் கூறியுள்ளார் ஜொனிதா.

குறிப்புச் சொற்கள்