100 சிகரெட் புகைக்கும் பழக்கத்தைத் தூக்கி எரிந்துவிட்டேன்: ஷாருக் கான்

2 mins read
a381a51d-0437-4b93-a14e-7919c7f2c002
நடிகர் ஷாருக் கான். - படம்: ஊடகம்
multi-img1 of 2

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.

தனது 59வது பிறந்தநாளை சனிக்கிழமையன்று (நவம்பர் 2) ரசிகர்களுடன் கொண்டாடினார். மனைவி கெளரி கான், மகள் சுஹானா கான், குடும்ப உறுப்பினர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் ஷாருக் கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்பொழுது நடைபெற்ற ‘மீட் அண்ட் கிரீட்’ பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ஷாருக் கான் பேசியபோது, “நான் இப்பொழுது புகைபிடிப்பது இல்லை. முழுமையாக நிறுத்திவிட்டேன். புகை பிடிப்பதை நிறுத்திய பின்பு எனது சுவாசம் சீராக இருப்பதாக உணரமுடிகிறது,” எனக் குறிப்பிட்டார்.

ஷாருக்கான் எடுத்துள்ள புதிய முடிவைக் கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2011ல் நடந்த ஒரு நேர்காணலில் ஷாருக்கான், “நான் ஒரு நாளைக்குக் குறைந்தது 100 சிகரெட்டுகள் பிடிப்பேன். சில நேரங்களில் சாப்பிடுவதைக் கூட மறந்துவிடும் அளவுக்கு புகைப்பேன். தண்ணீர் குடிக்கமாட்டேன். காபி மட்டும் 30 கோப்பைகள் குடிப்பேன். அதனைக் குடித்தும், எனக்கு சிக்ஸ் பேக்ஸ் உள்ளது,” எனப் பேசியிருந்தார்.

ஒரே வருடத்தில் ‘பதான்’, ‘ஜவான்’ என இரண்டாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட படங்கள். அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானியுடன் உறுதியாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் ‘டங்கி’ என 59 வயதிலும் சீரிய வேகத்துடன் சுழன்று கொண்டிருக்கிறார் ஷாருக்கான்.

இவர் முதலில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்த நிலையில், 1992ல் ‘தீவானா’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து ‘பாசிகர்’, ‘தர்’, ‘கரண் அர்ஜுன்’, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘குச் குச் ஹோதா ஹை’, ‘தேவதாஸ்’, ‘சக் தே இந்தியா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக மாறினார்.

திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். ஷாருக்கானின் சொத்து மதிப்பு 7,310 கோடி எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஷாருக்கான்சொத்துமனைவிபிறந்தநாள் வாழ்த்துகள்