போராட்டங்களைக் கடந்து வந்துள்ளேன்: பிராத்தனா நாதன்

போராட்டங்களைக் கடந்து வந்துள்ளேன்: பிராத்தனா நாதன்

2 mins read
108061ed-a5b2-426d-938a-8f20a15d0b62
கமலுடன் பிராத்தனா. - படம்: எக்ஸ் தளம் / பிராத்தனா.

கடந்து சென்ற நாள்களை அசைபோட்டுப் பார்க்கும் போதுதான் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது என்பது தெரிகிறது என்கிறார் இளம் நடிகை பிராத்தனா நாதன்.

அதேசமயம் சுற்றி இருப்பவர்கள் ஆதரவு தராவிட்டாலும் உண்மையாக உழைத்தால் வெற்றி பெறலாம் எனும் உண்மையும் புரிகிறது என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’ (டிடிடி), ‘ஹேப்பி ராஜ்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிராத்தனா.

அடுத்து ‘பார்க்கிங்’ தயாரிப்பாளரின் அடுத்த படமான ‘நிஞ்சா’வில் நாயகியாக உயர்ந்திருக்கிறார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

பிராத்தனா கேரளாவைச் சேர்ந்தவரா என்றுதான் அவரை முதன்முறை பார்ப்பவர்கள் கேட்கிறார்களாம். ஆனால், தாம் சென்னை பெண் என்கிறார் அவர்.

“உண்மையாகவே நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவள். தந்தை கால்நடைத் துறை அதிகாரி. அம்மா பரதநாட்டியக் கலைஞர்.

“அப்பா, அம்மாவுக்கு நான் பொறியியல் படிக்க வேண்டும் என ஆசை. எனக்கோ அதில் அறவே விருப்பமில்லை. பொறியியல் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அப்படிப்பைக் கைவிட்டுவிட்டேன். பிறகு கணினித் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டேன்,” என்று சொல்லிச் சிரிக்கிறார் பிராத்தனா.

இவர் படிப்பைக் கைவிட்டதில் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த வருத்தம். ஆனால், பிராத்தனாவுக்குக் கொண்டாட்டம்.

அரை நாள் கல்லூரி படிப்பு, மீதமுள்ள நேரம் ‘மாடலிங்’ துறை, நடிப்பு எனப் பிரித்துக்கொண்டு தனது கனவுகளை நோக்கிப் பயணத்தை அமைத்துக்கொண்டுள்ளார்.

“விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கியதும் சினிமா மீது ஆர்வம் உண்டானது. என்னுடைய உறவினர் ஷக்தி பிரதீப் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். அவர் மூலமாகத்தான் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன்.

“பாபி மாஸ்டர் இயக்கத்தில் நான் நடித்த இரண்டாவது படத்தில் முக்கியமான கதாபாத்திரம் அமைந்தது. ஆண்ட்ரியா நடிப்பில் உருவான அந்தத் திகில் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ என அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்துவிட்டன.

“இதுவரை நடிப்புத் தேர்வு மூலமாகவே எனக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளேன். ‘பார்க்கிங்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்த வாய்ப்பும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சில மாதங்கள் இடைவெளி ஏற்பட்டது. மனம் சோர்ந்துபோன நேரத்தில்தான் மீண்டும் உற்சாகம் அளிக்கும் விதமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வாய்ப்பு கிடைத்தது.

“திரும்பிப் பார்க்கும்போது எல்லாமே போராட்டமாகத்தான் தெரிகிறது. ஆனால், நான் ஒரே கோணத்தில் மட்டும் எதையும் பார்ப்பதில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் கடந்துவிடலாம்.

“சினிமாவில் நடிப்பதாகச் சொன்னபோது அப்பா என்னை ஆதரிக்கவில்லை. அம்மாவும் ஓரளவுதான் ஆர்வம் காட்டினார். ஆனால், தொடர்ந்து நடிப்புத் தேர்வுகளில் பங்கேற்றதால் என் திறமையை மெருகேற்றிக்கொள்ள முடிந்தது.

“என் அனுபவத்தில் திரைத்துறையைப் பாதுகாப்பான துறையாகவே கருதுகிறேன். இந்தத் துறை எனக்குப் பிடித்திருக்கிறது. ஒருவேளை நடிக்காமல் போயிருந்தால், உதவி இயக்குநராக சினிமாவில்தான் இருந்திருப்பேன்,” என்கிறார் பிராத்தனா.

குறிப்புச் சொற்கள்