ராதிகா சரத்குமார் திரைத்துறையில் அறிமுகமாகி ஏறக்குறைய 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும்கூட சினிமா தனக்கு சலிக்கவே இல்லை என்கிறார்.
தனது சினிமா வாழ்க்கை பெரும் அனுபவம் என்றும் அவற்றை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றும் சொல்கிறார்.
சிவகார்த்திகேயன் சொந்தமாகத் தயாரிக்கும் ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகாவை கதாநாயகியாக நடிக்க வைத்திருப்பது அவரது இந்த அனுபவமும் திறமையும்தான்.
இந்தப் படத்தில் 75 வயதான பவுனுத்தாய் கதாபாத்திரத்தில் ராதிகாவின் தோற்றமும் நடிப்பும் மிரள வைக்கும் என்கிறார்கள்.
“இந்த சினிமா உலகில் நான் அறிந்தது கொஞ்சம். அதிலும் நான் நினைவில் சேமித்தது கொஞ்சம்.
“உண்மையாக நான் இப்போது நடிக்கும் ‘தாய் கிழவி’ எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்த படம்,” என்று விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.
இயக்குநர் சிவகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ராதிகாவை மனத்தில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதியதாகவும் அவர் மட்டுமே இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்றும் கதை எழுதும்போதே முடிவு செய்துவிட்டாராம்.
75 வயது கிழவி வேடம் என்றதும், சற்றே ஆயாசமாக உணர்ந்த ராதிகா, முதலில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் யார் என்று தெரிந்ததும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கதையை சரத்குமார் கேட்கப்போக, “அருமையான கதையை ஏன் வேண்டாம் என மறுக்க வேண்டும்? கிராமத்தையும் அங்குள்ள மக்களையும் அழகான வாழ்வியலுடன் கண்முன்னே கொண்டு வந்து நிகழ்த்தும் கதையில் ஏன் நடிக்கக் கூடாது,?” என்று கேட்டுள்ளார்.
அதன் பிறகு நடிக்க முன்வந்தாராம் ராதிகா.
“இந்தக் கதையைக் கேட்டதும் கமல்ஹாசனின் நினைவு வந்தது. ஏன் அவரைப்போல் நாமும் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடக் கூடாது எனத் தோன்றியது. நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே தெரிய வேண்டும். ராதிகா தெரியக் கூடாது என்ற எண்ணம் வந்தது. பின்னர் கமலைத் தொடர்புகொண்டு பேசியபோது, கொஞ்சம் கடினமாக இருக்கும் பார்த்து செய்ய வேண்டும் என்றார்.
“கேரளாவைச் சேர்ந்த வினிஷ் என்பவர் ஒப்பனைக்குப் பொறுப்பேற்றிருந்தார். அவரது உதவியால் பவுனுத்தாயாகவே மாறிவிட்டேன். புகைப்படம் எடுத்து கமலுக்கு அனுப்பியபோது கமல் பரவசமாகிவிட்டார்,” என்று குழந்தையைப் போல் துள்ளிக்குதித்து உற்சாகப்படுகிறார் ராதிகா.
“வேறு எந்தக் கதாநாயகியும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டதில்லை. நீ சாதித்துவிட்டாய்,” என்று கமல்ஹாசன் பாராட்டினாராம்.
அச்சமயம் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ராதிகா. அப்போது ‘தாய் கிழவி’ படத்தின் முன்னோட்டத்தையும் பார்த்துள்ளார் கமல்.
இதனிடையே, முன்னாள் நடிகை ஸ்ரீபிரியாவை கைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘இதுபோன்ற ஒரு நடிகை இனி பிறந்துதான் வர வேண்டும்’ என்று பாராட்டியுள்ளார்.
கமலின் பாராட்டால் உச்சிகுளிர்ந்து போயுள்ள ராதிகா, நடிகர் சிவகார்த்திகேயனையும் பாராட்டத் தவறவில்லை.
சிவாவின் ஆரம்பக் கால பயணத்தையும் கடும் முயற்சிக்குப் பிறகு அவர் அடைந்துள்ள இடத்தையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.
சிவா இப்போது தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதாகவும் நல்ல கதைகள் திரைப்படமாக வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
‘சம்பாதித்த பணத்தை எல்லாம் ஏன் திரும்பத் திரும்ப திரைத்துறையிலேயே முடக்குகிறீர்கள்?’ என்று கேட்கும்போதெல்லாம், ‘அதுதானே நியாயம்’ என்பார் கமல்.
“அதேபோல், தான் சம்பாதிப்பதை சினிமாவில் கணிசமான அளவு முதலீடு செய்கிறார் சிவா,” என்று கூறிய ராதிகா, சிவாவைப் போன்ற இளையர்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது அபூர்வம் என்கிறார்.
ராதிகாவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சிவாவின் குழு செய்து கொடுத்ததாம்.
“இந்த பெருந்தன்மையான போக்கை மறக்க முடியாது. அவர் நடிப்பது போன்ற பெரிய படம் அல்ல இது. ஆனாலும் படத்தின் தேவைக்கு மேல், மனம் கோணாமல் எங்களை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவர் நல்ல படங்களைத் தயாரிக்கும் முனைப்பைக் கைவிடக்கூடாது. இதுவே எனது வேண்டுகோள்,” என்று கூறியுள்ளார் ராதிகா.

