அதிக வேலைப்பளுவின் காரணமாக வாழ்க்கையை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
இளம் வயதில் இரவு பகல் பாராமல் வெறித்தனமாக வேலை பார்த்ததாகவும் அவர் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“வாழ்க்கையில் நாம் பலவற்றைத் திட்டமிடுகிறோம். ஆனால், எல்லா திட்டங்களுமே வெற்றி பெறுவதில்லை. நானும் இதற்கு விதிவிலக்கல்ல. எதுகுறித்தும் கவலைப்படாமல் ஒரு நதியைப் போல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
“நம்மில் பலர் அதிக வேலைகளைச் செய்ய விரும்புகிறோம். ஆனால், வேலைச்சுமை காரணமாக சிலர் தமது வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர்,” என்று கூறியுள்ளார் ரகுமான்.
தற்போது தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க கணிசமான நேரத்தை ஒதுக்குகிறாராம். குடும்பத்தோடும் நேரம் செலவிட மறப்பதில்லை என்கிறார்.
“புது விஷயங்களைக் கற்றுக்கொள்வது முக்கியம். அதிலும் என் கவனம் உள்ளது. அதற்காக வேலை நம்மை விழுங்கிவிடக் கூடாது என்பதால் பணிச்சுமையைக் குறைத்துக் கொண்டுள்ளேன்,” என்று அண்மைய பேட்டியில் ரகுமான் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இவரது இசையில் அடுத்து, ‘உப் யே சிபாயா’ என்ற இந்திப் படம் சனிக்கிழமை (செப்டம்பர் 6) வெளியாகிறது. ஜி.அசோக் இயக்கியுள்ள இப்படத்தில் வசனங்களே கிடையாது. நகைச்சுவையையும் ரகுமானின் இசையையும் மட்டுமே நம்பி படத்தை உருவாக்கி உள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.
இப்படத்தில் பணியாற்றியது சுதந்திரமான, சவாலான அனுபவமாக இருந்ததாகச் சொல்கிறார் ரகுமான்.
“மற்ற படங்களில் வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன. இசை ஒருபடி பின்தங்கி இருக்கும்.
“ஆனால் இந்தப் படத்தில் இசையும் கதையின் ஒருபகுதி. இதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதை உண்மையாகவே ரசிப்பேன்,” என்றும் ரகுமான் கூறியுள்ளார்.