சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் சரவணன், ஒரு திரைப்படத்தின் வியாபாரம் என்பது திருமணத்துக்காக நடைபெறும் பெண் பார்க்கும் சடங்கு போன்றது என்றார்.
“பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், நல்ல குணங்கள் இருப்பது தெரிய வந்தாலும், அதிக வரதட்சணை கேட்பதற்காக ஏதாவது குறை சொல்லிப் பேசுவதுதான் வழக்கம்.
“அதேபோல் ஒரு புதுப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்க வருபவர்களும் படத்தைப் பார்க்கும்போது அறவே சிரிக்கக்கூட மாட்டார்கள். ஏதோ கடமைக்காக படம் பார்க்க வந்தது போலவே நடந்து கொள்வர்,” என்றார் சரவணன்.
இப்படத்தை பார்த்த ‘ட்ரைடன் ஆர்ட்’ ரவீந்திரனும், முதலில் சுமார் ஒன்றரை மணி நேரம் படம் குறித்து மட்டுமே தன்னுடன் பேசியதாகவும் வியாபாரம் குறித்து பேசத்தொடங்கியதும் ‘நான்தான் இப்படத்தை வெளியிடுவேன்’ என்று கூறியதாகவும் சொல்கிறார் சரவணன்.
இந்தப் படத்தின் கதையை அவர் எழுதியபோது வேறு சில கதாநாயகர்களை மனதில் வைத்துதான் ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கினாராம். ஆனால் அந்த நாயகர்களை தாம் தேடிச் சென்றபோது எதுவுமே எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என ஏமாற்றத்துடன் குறிப்பிட்டார்.
“நான் மனதில் நினைக்கும் அனைத்துமே கிடைத்துவிடாது. அதை நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன். எனினும் எப்போதுமே எனக்கு அண்ணனாக, முதுகெலும்பாக இருக்கும் நாயகன் சசிகுமார் என்னுடைய நலன் கருதி இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அவருடைய இந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது,” என்று குறிப்பிட்ட இயக்குநர் சரவணன், அடுத்து சொன்ன விஷயம் அரங்கில் இருந்தவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.
தனக்கு உதவி செய்த சசிகுமாரை தாம் மிகவும் கொடுமைப்படுத்திவிட்டதாக வருத்தப்பட்டார். அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
“என்னை நம்பி வந்த சசிகுமார் அண்ணனை எவ்வளவு மரியாதையாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை.
“இனிமேல் யாருக்கும் எந்த உதவியும் செய்யக்கூடாது என்று அண்ணன் நினைக்கும் அளவுக்கு அவரை பாடாய்ப்படுத்திவிட்டேன். கடைசி கட்ட படப்பிடிப்பின்போது அவருக்கு நான் செய்த கொடுமைகளுக்காக அவர் என்னை மன்னிக்க வேண்டும்.
“மக்கள் கூட்டத்துக்குள் அவரை நிற்க வைத்து அடிவாங்க வைத்தேன். ஆனால் அவரோ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் தம் உயிரைக் கொடுத்து நடித்தார்.
“எனது படைப்பில் ஒரு காட்சிகூட உண்மைக்குப் புறம்பாக, யதார்த்தத்துக்கு மாறாக இருக்கக்கூடாது என்பதால்தான் அவ்வாறு நடந்துகொண்டேன்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சரவணன்.
‘நந்தன்’ படத்தில் கிட்டத்தட்ட இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தில் அவருக்காக ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.
“எந்த ஒரு கட்டத்திலும் வாழ்க்கையின் எத்தகைய சூழ்நிலையிலும் சிரித்த முகத்துடன் நிதானமாகச் செயல்படுங்கள் என்று அடிக்கடி அவர் சொல்லிக்கொண்டே இருப்பார். அவரிடம் நான் கற்றுக்கொண்ட ஆகச்சிறந்த பண்புகளில் இது மிக முக்கியமானது,” என்கிறார் சரவணன்.

