கோவாவில் நடந்த 55வது அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு நான் இதுவரை அந்த மாதிரி படங்களைப் பார்த்ததே இல்லை என்று பேசினார்.
சிவகார்த்திகேயன் அண்மையில் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து இருந்தார். உலகம் முழுவதும் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலை ஈர்த்துள்ளது. திரைப்படம் வெளியாகி 25 நாள் கடந்தும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் கோவாவில் நடக்கும் 55வது அனைத்துலகத் திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த நடிகை குஷ்பு இவரை நேர்காணல் கண்டார்.
அப்போது சிவகார்த்திகேயன் தனது தொழில் வளர்ச்சி மற்றும் சினிமா மீது உள்ள காதலைப் பற்றி உரையாடினர்.
“திரைப்பட விழாவில் பங்கேற்ற மக்களைப் பார்த்து இவர்களுக்குள் இருக்கும் நல்ல சினிமாவை பார்த்துவிட வேண்டும் என்ற தேடல் என்னிடம் இல்லை. ஆனால், நான் ஒரு சிறந்த சினிமா காதலன் மற்றும் நல்ல ரசிகன்.
“நான் ரஜினி சாருடைய மிகப்பெரிய ரசிகன். அனைத்து நடிகர்களின் திரைப்படங்களையும் நான் முதல் அல்லது இரண்டாம் நாளில் திரையரங்குக்குச் சென்று பார்த்து விடுவேன்.
“2005ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நான் திரைப்படங்களைத் திருட்டுதனமாகவோ, படங்களைத் தரவிறக்கம் செய்தோ பார்த்ததில்லை. இதுதான் நான் சினிமாவின் மீது வைத்துள்ள காதல்,” என்றார்.