அந்தப் படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: ஆர்.ஜே. பாலாஜி

1 mins read
72f3c391-741b-4556-8edc-20dd8cbd0712
ஆர்.ஜே. பாலாஜி. - படம்: ஊடகம்

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கும் தனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி தெளிவுபடுத்தி உள்ளார்.

இவர் ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தை இயக்கி இருந்தார். தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது ‘கருப்பு’ திரைப்பபடம். சாய் அபயங்கர் இசையில் உருவாகும் இப்படத்தை டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.

தீபாவளியை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் ‘காட் மோட்’ (God Mode) பாடல் வெளியாகி சூர்யா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.

பட வேலைகள் ஏறக்குறைய 80% முடிந்துவிட்டதாம். எனவே, தனது படைப்பு வெற்றிபெற வேண்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு செய்தார் பாலாஜி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“அதற்காக நன்றி சொல்லத்தான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்தேன். ‘கருப்பு’ படம் எதிர்பார்த்தபடியே நல்லவிதமாக உருவாகி உள்ளது. விரைவில் ஒரு நல்ல தேதியைப் பார்த்து வெளியிடுவோம். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வரும்,” என்றார் ஆர்.ஜே. பாலாஜி.

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இரண்டாம் பாகத்திலும் நயன்தாராதான் கதாநாயகி.

இப்படம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த பாலாஜி, “அந்தப் படத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்தப் படத்தை தொடங்கும்போதே என்னிடம் விவரம் தெரிவித்தனர். அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு என் வாழ்த்துகள்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்