விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் நடிகர் சூரி. எந்தவொன்றையும் வெற்றி பெற்றவர் சொன்னால் தான் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும் என்ற கூற்றுக்கு தற்போது ஆட்ட நாயகனாக கலக்கிவரும் நடிகர் சூரி நன்றாக பொருந்துகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தில் நடித்த சூரிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. அதோடு விட்டுவிடாமல் அடுத்த கட்டமாக தொடர்ந்து கதாநாயகனாக வந்த வாய்ப்பை ஏற்றுக் கச்சிதமாக நடிப்பைக் கொடுத்து தற்போது அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு முன்னணி கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார்.
அந்த வகையில் விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, கருடன் படத்தில் சொக்கன் எனும் கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைத்திருப்பார். இப்படம் 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் லாபம் 50 கோடிக்கு மேல் வசூல் ஆகி மக்களிடம் பாராட்டு பெற்று விட்டது.
இந்நிலையில், பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இப்படமும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் சூரி நடித்திருக்கிறார்.இதற்கிடையில், விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு கதாநாயகனாக அவதரித்த சூரி ஓர் ஆண்டிலேயே நான்கு தரமான படங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
மேலும், சூரி நடிப்பில் உருவான மூன்று படமும் அனைத்துலக அளவில் வெற்றிப் படமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி அண்மையில் சூரி அளித்த நேர்காணலில் கூறியதாவது, “கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழுமலை, கருடன் ஆகிய மூன்று படங்களுமே ஒரே நேரத்தில் ரோட்டர்டேம் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
“அது மட்டுமல்ல ஒரே ஆண்டில் மூன்று படங்களும் தேர்வாகியது மிகப்பெரிய விஷயம்,” என சூரி தன்னைத்தானே பாராட்டி பேசி இருக்கிறார்.
அத்துடன், “அந்த படங்களை விழாவில் பார்ப்பவர்களும் இது என்ன ஒரு படத்தில் நடித்த கதாநாயகனே அடுத்தடுத்து மூன்று படங்களிலும் வருகிறார். இவர் இந்தியாவில் மிகப்பெரிய கதாநாயகனாக இருப்பாரோ என்று பேசும் அளவிற்கு என்னுடைய புகழ் உயர்ந்திருக்கிறது என்று நினைத்துப் பார்க்கும்போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது,” என்றார் சூரி.
தொடர்புடைய செய்திகள்
“இதுவரை எந்த ஒரு கதாநாயகனுக்கும் கிடைக்காத ஓர் அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பது நான் செய்த பாக்கியம். இன்னும் அந்த வகையில் நான் போராட வேண்டியது சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என நான் உணர்கிறேன். நான் இப்பொழுது தான் கதாநாயகனாக நடிக்கவே ஆரம்பித்து இருக்கிறேன்.
“ஆனால், அதற்குள் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததை பார்க்கும் பொழுது நான் எதையோ பெரிதாக சாதித்தது போல் சந்தோஷமாக உணர்கிறேன். இன்னும் தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதை நான் கவனத்தில் கொண்டு தமிழ் ரசிகர்கள் போற்றும் வகையில் வெற்றிப் படங்களை அளிப்பேன்,” என்று சூரி அவருடைய மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்திருக்கிறார்.