வர்த்தக ரீதியான படங்கள் செய்தாலும் தனக்கென ஒரு சமூக அக்கறை உள்ளது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தம்முடைய படங்கள் போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பதாகச் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் லோகேஷ் மறுத்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
“என் படங்கள் மீது நீண்ட நாள்களாகவே போதைப் பழக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. என்னுடைய படங்களைக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், போதைப் பொருள்களைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நான் எங்குமே சொல்லி இருக்கமாட்டேன். வர்த்தகப் படங்களே செய்தாலும் எனக்கென்று ஒரு சமூக அக்கறை உள்ளது. அதை மீறி நான் எதுவும் செய்ததில்லை,” என்றார் லோகேஷ்.
“என்னுடைய ‘மாநகரம்’ படம் தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ வரை எனக்குக் கிடைத்த கதாநாயகர்கள் மூலமாகப் போதைப்பொருள்களுக்கு எதிராக உரக்கப் பேசியுள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“எவ்வளவு தூரம் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வுகளுக்கு நான் ஆதரவு அளித்திருக்கிறேன் என்று எனக்குத்தான் தெரியும். என் சார்பாக அவ்வளவு பிரசாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன,” என்றார் லோகேஷ்.
“கல்லூரி கல்லூரியாகச் சென்று நான் போதைக்கு எதிராகப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறேன். 15,000 மாணவர்களைப் போதைப் பொருள்களைத் தொடமாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்துள்ளேன்,” என இயக்குநர் லோகேஷ் சொன்னார்.
“படத்தில் நல்லதைப் பார்க்கவே மாட்டோம், கெட்டதைத்தான் பார்ப்போம் என்று சொன்னால் நான் என்னதான் செய்வது?” என்று லோகேஷ் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஜனநாயகனில் சிறப்புத் தோற்றம்
இதற்கிடையே திரு லோகேஷ், விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“விஜய் அண்ணாவும், இயக்குநர் வினோத்தும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அழைத்ததால் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்தேன். இதுகுறித்து விரிவாகச் சொல்ல முடியாது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
‘ஜனநாயகன்’ படத்தில் இயக்குநர்கள் அட்லி, நெல்சன் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘கைதி 2’ கைவிடப்படவில்லை
இதற்கிடையே, ‘கைதி 2’ கைவிடப்படவில்லை என்று லோகேஷ் தெரிவித்துள்ளார்.
நான் அதிகமாகச் சம்பளம் கேட்டதால் ‘கைதி 2’ படத்திலிருந்து விலகிவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. அல்லு அர்ஜுன் படத்திற்குப் பிறகு, எனது அடுத்த படம் ‘கைதி 2’ என்று லோகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
‘விக்ரம் 2’ மற்றும் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்களை எடுத்து முடிக்காமல் நான் சினிமாவிலிருந்து விலகமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

